தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உப்புக்கோட்டையில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோயிலில் மூன்று நாள் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி உற்சவர் கோவிலில் உள்ள வரதராஜபெருமாள் வீதி உலா வந்தார். அப்போது வரதராஜபெருமாளுக்கு பால், பன்னீர், சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வரதராஜபெருமாள், கள்ளழகர் வேடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குதிரை வாகனத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் கள்ளழகரை வரவேற்று சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து முல்லை பெரியாற்றின் கரையில் உள்ள மூலவர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று காலை 6 மணியளவில் பச்சைப்பட்டு உடுத்தி உப்புக்கோட்டை முல்லை பெரியாற்றில் கள்ளழகர் இறங்கினார்.
இதேபோல் முல்லைப்பெரியாற்றின் மேற்குக்கரையில் உள்ள உப்பார்பட்டி கிராமத்தில் சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில், மூலவர் கோவிலில் இருந்து உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் இறங்கினார். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 2 குதிரை வாகனங்களில் கள்ளழகர் வேடத்தில் வரதராஜபெருமாளும், சுந்தரராஜபெருமாளும் எதிரெதிரே ஆற்றில் இறங்கியதை கண்ட பக்தா்கள் பரவசம் அடைந்தனர். பக்தர்கள் எழுப்பிய ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷங்கள் விண்ணை அதிர செய்தது. எதிர்சேவையை தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த நொச்சி இலைகளால் வேயப்பட்ட தற்காலிக மண்டபத்தில் கள்ளழகர் வைக்கப்பட்டார். அங்கு, கள்ளழகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதேபோல் சித்ரா பௌவுர்ணமியையொட்டி போடி சீனிவாச பெருமாள் மஞ்சள் பட்டு உடுத்தி, கையில் சாட்டையுடன் கள்ளழகர் வேடத்தில் தங்க குதிரையில் அமர்ந்து நேற்று காலை 6.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க கொட்டக்குடி ஆற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, அரோகரா, பெருமாளே, என்ற கோஷங்களை எழுப்பினர். அதன்பிறகு தங்க குதிரையில் சீனிவாச பெருமாள் புதூர், வீரபாண்டிய கட்டபொம்மன் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு, கோவில் மெயின் பஜார் உள்ளிட்ட இடங்களில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பெரிய தீ பந்தங்களுடன் பெருமாளை வரவேற்று ஊர்வலத்தில் பங்கேற்றனர். பெருமாள் வீதிஉலா வந்த வழிநெடுகிலும் ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். அவர்கள் தட்டில், சர்க்கரை வைத்து, அதன் மீது சூடம் ஏற்றி தீபத்தை பெருமாளுக்கு காட்டி வழிபாடு செய்தனர். இதேபோல் தீப்பந்தம் ஏற்றி வந்தவர்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை ஆண் பக்தர்கள் வழங்கினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த பெருமாள் கோவிலை வந்தடைந்ததும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்