பல்வேறு மாநிலங்களில் ஆன்மீக ஸ்தலங்கள் இருந்தாலும், தமிழகத்திலுள்ள ஆன்மீக ஸ்தலங்களுக்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. காரணம் தமிழர்களின் பாரம்பரியமும், கலைகளும், இலக்கியங்களும் என அனைத்தும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியாகவும் சரி ஆன்மீக ரீதியாகவும் சரி அப்படி முன்னோர்கள் கூறிய வரலாற்று படைப்புகள் நிறைய உண்டு.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கோவலனுக்கு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் சரியாக விசாரிக்காமல் மரணதண்டனை அளித்து கொன்றுவிட்டதாக அறிந்த கோவலனின் மனைவி கண்ணகி, பாண்டிய மன்னனின் அரச சபையில் அரசனின் தவறை உணர்த்தி தவறாக நீதி வழங்கியதற்காக மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபமிட்டு மதுரையை எரித்து விட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையிலிருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. அப்படி சென்ற இந்த இடத்தில் தான் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது என வரலாற்று சுவடுகளால் நம்பப்படுகிறது
அப்படி உள்ள இடம்தான் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் அல்லது மங்களா தேவி கண்ணகி கோயில் என அழைக்கப்படும் இந்த இடம். இந்த கோவிலுக்கு செல்ல கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி பகுதியிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும் தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதி வழியாக அதாவது பளியன்குடி எனும் இடத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் வனப்பகுதி வழியாக செல்லும் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள இடமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளதாகவும், ஆண்டுக்கு ஒரு முறை சித்ரா பவுர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டும் இக்கோயில் விழாவானது தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த கோவில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு வார திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டதும் அது இரு மாநில எல்லை பிரச்சனையால் தற்போது ஒரு நாள் மட்டும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இருக்கும் மங்கலதேவி கண்ணகி கோயில் வளாகத்தில் கேரள மக்கள் வழிபடும் துர்க்கை அம்மன் கோயிலும் உருவாகி உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர் . ஒரே இடத்தில் தமிழக-கேரள சம்பந்தப்பட்ட இரு மாநில தெய்வங்கள் இருப்பதால் தமிழ்நாடு கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் இந்த சித்திரா பௌர்ணமி தினத்தன்று அதிகமானோர் கூடி இந்நாளில் வழிபாடு செய்து வருகின்றனர்.
வருடந்தோறும் சித்ரா பவுர்ணமி அன்று கண்ணகி கோவில் விழா கொண்டாடுவதற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த நாளில் கண்ணகி கோவில் கூடும் கூட்டம் அளவுக்கதிகமாகி வருகிறது. அதற்கு காரணமாகும் இந்த கோவிலுக்கு செல்லும் வனப்பகுதியின் சூழல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. மேலும் இந்த வனப்பகுதியில் இருந்து சென்று கோவிலில் வழிபாடு செய்வது குறிப்பாக பெண்களும் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளையும், இதிகாச புராண கதைகளிலும் பேசப்பட்ட கண்ணகி கோவில் இருக்கும் இடம் எல்லைப் பிரச்சினை குறித்த புகாரும் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் உள்ள இந்த கண்ணகி கோயில் இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினை இருப்பதும் தற்போது தொடர்ந்து வருகிறது.
கண்ணகி கோவிலின் முகப்பு வாயில் தமிழகத்தை நோக்கியே அமைந்துள்ளது . ஆனால் இதற்கான பாதை என்பது தற்போது அதாவது வாகனங்கள் சென்று வருவதற்கான மிக எளிமையான பாதையாக இருப்பது கேரளாவை சார்ந்து உள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக பகுதிகள் பரிபோனதாகவும் ஆதலால் இந்த எல்லை பிரச்சனை இருப்பதும் , கோவிலுக்கு சென்று வர சாலை வசதி இல்லாத நிலையும் தற்போதும் இருந்து வருகிறது. தமிழர்களுக்கு சொந்தமான இந்த கோவிலுக்கு சென்று வரவும் கோயிலின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தமிழக வனப்பகுதி வழியாக சாலை அமைத்து தரவேண்டும் என்பது தமிழக மக்கள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்