முல்லைப் பெரியாறு பேபி அணை கட்டுமானப் பொருட்கள் கொண்டு சென்ற வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதேநிலை தொடருமேயானால் கேரள வாகனங்கள் தமிழகப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

 

பேபி அணை பலப்படுத்துவதற்கான கட்டுமானப் பணி


தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு போக சாகுபடி கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் பேபி அணையை பலப்படுத்திக் கொள்வதற்கு 2022 முதல் 2 முறை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய அணை கண்காணிப்பு குழு தொடர்ந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து அணை வழுவாக உள்ளது என அறிக்கையை அளித்து வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கேரளா அரசோடு அனுமதி பெற்று பேபி அணை பலப்படுத்துவதற்கான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும், தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை பெற வேண்டிய அதிகாரம் கண்காணிப்புக் குழுவிற்கு உள்ளது. ஆனால் உள்நோக்கோடு தொடர்ந்து தட்டிக் கழிக்கும் முறையிலேயே செயல்பட்டு வருகிறது. 


 

வன்மையாக கண்டிக்கத்தக்கது


 

இந்நிலையில் நேற்று தமிழக நீர் பாசன துறை பொறியாளர்கள் வாகனம் மூலம் கட்டுமான பொருட்களை வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். கேரள வனத்துறையினர் அதனை தடுத்து நிறுத்தி வனத்துறை அனுமதி இல்லாமல் செல்ல முடியாது என்று நிறுத்தி வைத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால் கேரள வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையவும்  தடை செய்ய நேரிடும் என எச்சரிக்கிறோம். கேரளா அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழ்நாடு அரசு அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தீவிரமான போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என எச்சரிக்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ‘’விடியா திமுக அரசே.. மக்கள் உயிரோடு விளையாடுவதா?’’- ஈபிஎஸ் கடும் சாடல்!