சிறுநீரகத்தை தானமாக வழங்க மனைவியின் ஒப்புதலுக்கான பிரமாணப்பத்திரம் இல்லாததால், விண்ணப்பத்தை நிராகரித்த மருத்துவக்கல்வி இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்சியை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில், எனக்கு 40 வயதாகிறது. என்னுடைய சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டன. இந்தநிலையில் எனது உறவினர் ஒருவர் அவரது சிறுநீரகத்தை தானமாக எனக்கு வழங்க முன்வந்துள்ளார். ஆனால் சிறுநீரகம் தானமாக கொடுப்பது குறித்து எனது உறவினரின் மனைவி பிரமாணப்பத்திரம் அளிக்கவில்லை எனக் கூறி, எனது விண்ணப்பத்தை நிராகரித்து மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்தும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மனுதாரருக்கு சிறுநீரக தானம் செய்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இதுதொடர்பாக அவர் பிரமாணப்பத்திரம் வழங்குவார் என்று எதிர்பார்க்க முடியாது. அது நடக்காத ஒன்று. அதே நேரத்தில் சிறுநீரகம் தானம் செய்பவரின் தாயார், தன் மகன் தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என பிரமாணப்பத்திரம் கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி," மனுதாரருக்கு அவரது உறவினர் சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு அவரது தாயார் சம்மதம் தெரிவித்துள்ளார். பிற மருத்துவ காரணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், அவரது தாயாரின் பிரமாணப்பத்திரமே போதுமானது. இதற்கு அவரது சகோதரியும் ஒப்புதல் அளித்ததாக என்னுடைய கவனத்திற்கு வந்துள்ளது. எனவே இதுதொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான விண்ணப்பம், மனுதாரர் உறவினரின் தாயார் அளித்த பிரமாணப்பத்திரம், மனைவியுடனான வழக்கு விவரங்கள் அனைத்தையும் மீண்டும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். அதன்பேரில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என இந்த கோர்ட்டு நம்புகிறது."என உத்தரவிட்டார்.
அரசே இதுபோன்ற விஷயங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் என்பது மிக முக்கியமான ஒன்று - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா முள்ளண்குறிச்சி அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளி கடந்த 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம் மிகவும் சேதமடைந்தும், பள்ளியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் என எவ்வித வசதிகளும் முழுமையாக இல்லை. மேலும் பள்ளியை சுற்றி கருவேல மரங்கள் உள்ளதால் வெளிநபர்கள் சுலபமாக பள்ளி வளாகத்திற்குள் வந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.எனவே, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா முள்ளண்குறிச்சி அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியில் ஆய்வகங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகள் என அனைத்து அடிப்படை வசதிகளை செய்துதர உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது ஆனால், இந்த பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள், அரசே இதுபோன்ற விஷயங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் என்பது மிக முக்கியமான ஒன்று என கருத்து தெரிவித்தனர்.
மேலும் மனுதாரரின் மனு குறித்து 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அரசு தரப்பில் நான்கு வாரத்திற்குள் பள்ளியை சுற்றி காம்பவுண்ட் சுவர் போன்றவற்றை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள், பள்ளியின் ஆய்வகம், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர், விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை நான்கு வாரத்திற்குள் செய்து அதன் நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.