மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்று காலை முதல் தொழிலாளர்கள் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், இணை ஆணையாளர் சுப்ரமணியன் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையாளர் மெய்விழி செல்வி தலைமையில் 17 துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை மற்றும் பழ சந்தை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் எடை இயந்திரங்களுக்கு வியாபாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை அரசு தரப்பில் வழங்கப்படும் முத்திரை பதித்து சான்றிதழ் வாங்காததால் அவர்களிடம் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்களை  பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொடர்ச்சியாக பல முறை வியாபாரிகளுக்கு அறிவிப்புகள் அறிவித்தும் அவர்கள் எடை இயந்திரங்களுக்கு முத்திரை பதிக்காததால் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டோம், இந்த எடை இயந்திரங்களை வாங்க நினைப்பவர்கள் தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு வந்து 5000 - 25000 வரை அபதாரம் செலுத்திய பின்னர் அவரவர் எடை எந்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.
 
இது குறித்து அப்பகுதி நுகர்வோர்கள் கூறுகையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், பழமார்க்கெட், பூ மார்க்கெட் என அருகிலேயே அமைந்துள்ளது. பொதுமக்கள் அதிகளவு இப்பகுதியில் வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் குறிப்பிட சில வியாபாரிகள் முறைகேடாக நடந்து கொள்கின்றனர். பார்மலின் தடவிய மீன்கள் விற்பது அதிக ரசாயனம் தடவிய பொருட்களை விற்பது. எடை மிஷின்களில் குழப்பம் செய்வது என தவறான வழிமுறைகளை கையால்கின்றனர். எனவே முக்கிய மார்கெட் பகுதியில் அதிகாரிகள் அதிகளவு ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் இது போன்ற குற்றங்களை குறைக்க முடியும்” என கோரிக்கைவிடுத்தனர்