முதலமைச்சர் இன்று அரிட்டாபட்டி வருகை - அரிட்டாபட்டி மற்றும் விமான நிலையத்தை சுற்றி ட்ரோன் இயக்க தடை - மீறினால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மேலூர் பகுதியில் டங்ஸ்டன்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, சண்முகநாதபுரம், எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யும்வரை  தொடர் போராட்டம் செய்யப் போவதாக அரிட்டாபட்டி  மக்கள் முடிவெடுத்து கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

அரிட்டாபட்டியில் முதல்வர்

இந்நிலையில் மத்திய அரசு டாங்ஸ்டன்  திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவித்தது. இதை தொடர்ந்து அ. வெல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, தெற்குதெரு  உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கும்மியடித்து, கொண்டாடினர். இந்த வெற்றி அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
 
குடியரசு தினத்தில் முதல்வர் மதுரை வருவதால் அதிகாரிகள் காலை முதலே பரபரப்பாக பணி செய்து வருகின்றனர். மதுரையில் 1 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகை தர உள்ள நிலையில், தொடர்ந்து தனியார் ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு மாலை 3 முதல் 5 மணிக்குள் முதல்வர் அரிட்டாபட்டி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரோன்கள் பறக்க தடை

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை அரிட்டாபட்டி வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பயணிக்கும் வழிகள் மற்றும் அரிட்டாபட்டி கிராமம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாநகர் எல்லைக்குள் இன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது, என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளதும் குறிப்பிடதக்கது.