Republic Day 2025 Parade:  இந்திய குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி கர்தவ்யா பாதையில் இன்று பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது.

குடியரசு தின கொண்டாட்டம்:

நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தேசிய கொடியை ஏற்ற உள்ளார். 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் கருப்பொருள் ஸ்வர்னிம் பாரத் - விராசத் அவுர் விகாஸ்' (தங்க இந்தியா - பாரம்பரியம் மற்றும் மேம்பாடு), இது இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் தொடர்ச்சியான முன்னேற்றப் பயணத்தையும் பிரதிபலிக்கிறது. அதன்படி, செங்கோட்டையில் இன்று  இந்திய கலாச்சாரம் மற்றும் உயர்தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் விதமான அணிவகுப்பு டெல்லியில் நடைபெற உள்ளது.

அணிவகுப்பு எங்கு? எப்போது? | Republic Day 2025 Parade Timing 

குடியரசு தின அணிவகுப்பு காலை 10:30 மணிக்கு விஜய் சவுக்கிலிருந்து தொடங்கி கர்தவ்யா பாதை வழியாகச் சென்று, இந்தியா கேட் கடந்து, செங்கோட்டையில் முடிவடையும்.  குடியரசு தின அணிவகுப்பு ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு ஸ்ட்ரீம் செய்யப்படும். அதன்படி, குடியரசு தின அணிவகுப்பின் நேரடி ஒளிபரப்பை அதிகாரப்பூர்வ ஒளிபரப்பான தூர்தர்ஷனில் பார்க்கலாம். இந்த அணிவகுப்பு தூர்தர்ஷன் நேஷனல் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும். 76வது குடியரசு தின அணிவகுப்பானது இந்தியாவின் ராணுவ வலிமை, தேசிய வளர்ச்சி மற்றும் பல்வேறு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும். 

கலாச்சார அணிவகுப்பு:

குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 16 மற்றும் மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் 15 உட்பட 26 அலங்கார ஊர்திகள் இடம்பெறும். தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி கடந்த ஆண்டு அணிவகுப்பில் பங்கேற்றதால், இந்த ஆண்டு இடம்பெறவில்லை.

  1. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
  2. பழங்குடியினர் விவகார அமைச்சகம்
  3. கோவா
  4. உத்தராகண்ட்
  5. ஹரியானா
  6. ஜார்கண்ட்
  7. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  8. குஜராத்
  9. ஆந்திரப் பிரதேசம்
  10. பஞ்சாப்
  11. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
  12. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
  13. உத்தரப்பிரதேசம்
  14. பீகார்
  15. நிதி சேவைகள் துறை
  16. மத்திய பிரதேசம்
  17. புவி அறிவியல் அமைச்சகம் (IMD)
  18. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
  19. திரிபுரா
  20. கர்நாடகா
  21. தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ
  22. டெல்லி
  23. மேற்கு வங்காளம்
  24. சண்டிகர்
  25. கலாச்சார அமைச்சகம்
  26. CPWD 

ராணுவ பலம்:

அணிவகுப்பில் இந்தியாவின் ராணுவ பலம் மற்றும் உயர்தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களில் கண்டுள்ள முன்னேற்றமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு தந்திரோபாய ஏவுகணை 'பிரளய்', ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பான 'சஞ்சய்' ஆகியவை காட்சிப்படுத்த்தப்பட உள்ளன. அதோடு, T-90 குறிப்பாக T-90 பீஷ்மா வகை டேங்க், நாக் ஏவுகணை அமைப்பு, பிரம்மோஸ் ஏவுகணை, பினாகா ஏவுகணை அமைப்பு, ஆகாஷ் ஆயுத அமைப்பு, ALH துருவ் எனப்படும் இலகுரக ஹெலிகாப்டர் உள்ளிட்டவையும் இன்றைய குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.