முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரை மாநகராட்சி மற்றும் அரசு கள்ளர் பள்ளிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
காலை உணவுத் திட்டம்
’முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து, மதுரை மாநகராட்சி மற்றும் அரசு கள்ளர் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 15.09.2022 அன்று தொடங்கி வைத்தார்கள்.
மதுரையில் காலை உணவுத்திட்டம்
இத்திட்டத்தின் முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி 26 தொடக்கப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2686 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு மொத்தம் 73 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வரை பயிலும் மொத்தம் 7197 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் பள்ளிகளில் மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் வழங்கும் பணியில் 126 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மதுரை மாநகராட்சியின் சார்பில் மாதந்தோறும் ரூ.1500 மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிட உத்தரவிட்டார்
இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் மாணவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார், அமைச்சர் பழனிவேல் தியாகாரஜன். அப்போது அதே பள்ளியில் உயர்நிலை மற்றும் மேல் நிலை வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் உணவு அருந்தாமல் இருப்பதை கண்டார். ஒரு பள்ளி வளாகத்துக்குள் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் உள்ள 28 பள்ளிகளில் 1350 மாணவர்களுக்கும், அதாவது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கிட மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிட உத்தரவிட்டார். அதன் படி முதற்கட்ட முயற்சியாக. பல்வேறு தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் கடந்த செப்டம்பர் 11, 2023 முதல் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர்
மேலவாசல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை விரிவாக ஆய்வு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதில் மாணவர்களின் வருகை பதிவேடு காலை உணவு திட்ட பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து மதுரை மாநகராட்சி கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்களுடன் பேசிய அவர் திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்த அமைச்சர் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் காலை உணவு திட்ட பதிவேடு குறித்து ஆராய்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் உடல்நலன் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். காலை உணவு திட்ட விரிவாக்கம் முறையாக மாணவர்களுக்கு போய் சேர்கின்றதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.