சித்திரைத் திருவிழாவின் நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு 16-ஆம் தேதி  காலையில்  நடைபெற உள்ள நிலையில் அழகர்கோவிலில் இருந்து நேற்று கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார்.





இந்நிலையில் மதுரையில் வலம் வரும் கள்ளழகர் குறித்து மதுரை இளைஞர்கள் தயாரித்த பாடலை, மதுரை புதூர் சாலை பகுதியில் இருக்கக்கூடிய அரசு சுற்றுலா மாளிகையில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வெளியிட்டார். பொதுவாக சித்திரை திருவிழாவும் கள்ளழகர் மதுரை வருகையும் மதுரை மக்களுடன் ஒன்றோடு ஒன்று கலந்து விட்ட நிலையில், மதுரை மக்கள் மற்றும் இசைப் பிரியர்கள் குறித்து துள்ளல் இசை பாடலாக இந்த பாடல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 




 

இந்தப் பாடலை பிரபல பின்னணி பாடகர் மதிச்சியம் பாலா பாடியுள்ளார். மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவின் போது இந்த இசை ஆல்பத்தை தயார் செய்த தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான ஆதித்யா மகேந்திரன் பேசுகையில், “இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையை நோக்கி வரும் கள்ளழகரை வரவேற்கும் வண்ணம், ஒட்டு மொத்த மதுரைக்காரர்கள் பிரதிபலிப்பாக இந்த பாடல் அமைந்துள்ளது. இரண்டு நாட்களில் மதுரைக்கு வரும் கள்ளழகரை வரவேற்பதற்காக இந்த பாடல் நண்பர்கள் மூலமாக தயார் செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார். மேலும் இந்த பாடலை வெளியிட்ட பத்திரப் பதிவுத் துறை அமைச்சருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

 

கள்ளழகர் குறித்து வெளியிட்ட பாடல் தற்போது மதுரையில் பல்வேறு இடங்களில் ஒலிக்க துவங்கியுள்ளது. எதிர்சேவை நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடைபெற்றும் நிலையில் புதிய பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது என பாடலை இயக்கிய நண்பர் குழு தெரிவித்தனர்.