பொங்கலை முன்னிட்டு வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.  இந்நிலையில் வரும் 16 ஆம் தேதி அரசு சார்பில்  நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் முகூர்த்தகால் நடப்பட்டு துவங்கியது. வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்னர் விழா கமிட்டியினர்  முகூர்த்த கால் நட்டனர். இதனை தொடர்ந்து வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேலரி அமைப்பது காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடத்தை தயார் செய்யும் பணிகள் துவங்க உள்ளது. 




 

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி கட்டுப்பாடுடன் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளது. அறிவிப்பை பொறுத்து ஜல்லிக்கட்டு போட்டி எவ்வாறு நடைபெறும் என்பது தெரிய வரும். இதனிடையே தமிழக அரசு அறிவிக்கும் அறிவிப்பை ஏற்று அரசின் அறிவுறுத்தலின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தயாராக உள்ளதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

 





 



 


 


இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியினை  வணிகவரி மற்றும் பதிவித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும். கொரோனா கட்டுப்பாடு உள்ளதால், ஜல்லிக்கட்டு போட்டியை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை முதலமைச்சர் அறிவிப்பார். இது குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை காலை தெரியவரும். மதுரையில் மணிக்கணிக்கில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்துள்ளோம். அதனால் ஜல்லிக்கட்டு ஏற்பாடு குறித்து பயப்பட வேண்டாம்” என தெரிவித்தார்.