தேனி மாவட்டம் மேகமலை-வருசநாடு வனப்பகுதியில் உணவு மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள தடை விதித்து வனத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் அங்கு விவசாயம் செய்துவரும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள மேகமலை, வருசநாடு மலைப்பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சியில் ரயத்துவாரி முறையில் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களில் விவசாயம் நடைபெற்று வந்தது. கடந்த 1974ஆம் ஆண்டு சிறார், உடங்கலார், மூலவைகை ஆற்றுப் படுகை மற்றும் சிற்றாறுகளின் கரையோரங்களில் பொதுமக்கள் குடியேறி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த வன நிலங்களை சீர்படுத்தி விளைநிலங்களை உண்டாக்கி பயிர் செய்யத் தொடங்கினர்.


பின்னர் கடந்த 1964ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சி,  தேனி மாவட்டம் கூடலூரில் மொழி போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் ஆகியவற்றால் தும்மக்குண்டு, உப்புத்துறை, வெட்டுக்காடு,  காந்திகிராமம், கோடாரி யூத்து,  கட்சிக்காடு, கோரை யூத்து, மஞ்சள் ஊத்து, இந்திராநகர் அரசரடி பூசாரி புதுக்கோட்டை, அரண்மனை புதூர் , பொம்மு ராஜபுரம், வாலிபரை,  தண்டிகுலம், கொடிக்குளம் குடிசை காமராஜபுரம் ஆகிய மலை கிராமங்களில் பொது மக்கள் குடியேறினர்.


இவர்களுக்கு இடைப்படு காடுகள் திட்டத்தின் விளை நிலங்களை சீர்திருத்தி மரங்களை நடவும் ஊடு பயிரிட்டு கொள்ளவும் வனத்துறை அனுமதி அளித்தது. தற்போது மேகமலை மற்றும் வருஷநாடு மலை கிராமங்களில் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60,925 ஏக்கர் வன நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.




மேகமலை-வருசநாடு வனப்பகுதி கடந்த 2012ஆம் ஆண்டு மேகமலை வன உயிரின சரணாலயமாகவும், கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் மேகமலையில் காடுகள் அழிக்கப்படுவதாலும், ஆறுகளின்  இடமாற்ற படுவதாலும், மழை வளம் குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


நீதிமன்ற உத்தரவின்படி மேகமலை, வருஷநாடு வனப்பகுதியிலிருந்து மலை கிராம மக்களை வெளியேற்றி விவசாயத்தை தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். வனப்பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறுமாறு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மலை கிராமங்களில் இருந்து பொது மக்களை வெளியேற்றும் வனத்துறையினர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேகமலை வருஷநாடு மலை கிராமங்களில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் பொதுமக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி உரிமைகள் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


மேகமலை வருஷநாடு மலை கிராமங்கள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் வனத்துறையின் கெடுபிடிகள் சிக்கித் தவித்து வரும் நிலையில் அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று திமுக, அதிமுக கட்சிகள் வாக்குறுதி அளித்தன. வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமைகள் பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கோட்ட அளவிலான குழு மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று பெரியகுளம் சார் ஆட்சியர் அறிவித்திருந்தார்.



இந்தநிலையில் வருசநாடு வனப்பகுதியில்  உள்ள ஆக்கிரமிப்பு வன நிலங்களில் உழவு விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூடாது மீறினால் விவசாய பணிக்கு பயன்படுத்தும் டிராக்டர் மற்றும் உழவு மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று வருசநாடு வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாரம்பரிய வனவாசிகளுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி உரிமைகள் வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வனத்துறையின் தடை உத்தரவை மலைகிராம மக்கள் மத்தியில் அதிருப்தியும் வாழ்வாதாரம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று விவசாய சங்கங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.