தேனி நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டோ ஓட்டும் தொழில் பார்த்து வருகிறார் தேனியைச் சேர்ந்த 36 வயதாகும் கார்த்திக். இவர் நேற்று வழக்கம்போல் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு சென்றுள்ளார். தேனி நகருக்கு அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் இரு பயணிகள் ஆட்டோவிற்கு காத்திருந்ததைப் பார்த்து அவர்களை சவாரிக்கு ஏற்றி உள்ளார் கார்த்திக். ஆட்டோவில் ஏறிய 78 வயதுடைய  ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன் இருவரும் பழனிசெட்டிபட்டியில் இருந்து தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டுமென ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக்கிடம் தெரிவித்து உள்ளனர்.



அதன்படி ஆட்டோ ஓட்டுநரும் பழனிசெட்டிபட்டியில் இருந்து, தேனி பழைய பேருந்து நிலையம் வரை சென்று ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணனை இறக்கி விட்டு வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் இவரது ஆட்டோவில் ஏறும் பயணிகளிடம் சகஜமாக பழகும் வழக்கம் உடையவராக இருந்துள்ளார். தனது ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு இவருடைய விசிட்டிங் கார்டை கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி இந்த பயணிகளுக்கும் இவரது விசிட்டிங் கார்டை கொடுத்து உள்ளார். 



பின் வழக்கம் போல் அடுத்த சவாரியை எதிர்பார்த்து ஆட்டோ நிலையம்  சென்றுள்ளார் ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக். பின் ஒரு மணி நேரம் கழித்து இவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்பில்,  நான் உங்கள் ஆட்டோவில் ஏறி பழனிசெட்டிபட்டிலிருந்து தேனி பழைய பேருந்து நிலையம் வரை சவாரி செய்தேன். என்னுடைய பையை  ஆட்டோவிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.


அந்தப் பையில் ஆயிரக்கணக்கில் ரொக்கப் பணமும் அவருடைய வீட்டு சாவியும் இருந்ததாக கூறியுள்ளார். அந்த பையை கவனித்த ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் பத்திரமாக உள்ளது நானே நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து உங்கள் பணத்தை தருகிறேன் என்று அவர் இருக்கும் முகவரியை வாங்கி, அங்கு நேரடியாக சென்று பையையும் அதில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பத்திரமாக ஒப்படைத்துள்ளார். 



பணத்தைப் பெற்றுக்கொண்ட ராஜேந்திரன் ஆட்டோ ஓட்டுநரை பாராட்டி, அவருக்கு 100 ரூபாய் சன்மானமும் வழங்கியுள்ளார். அதனை வாங்க மறுத்து, எனது கடமையை செய்துள்ளேன் என்றுள்ளார் ஆட்டோ ஓட்டுனர்.  இது குறித்து பணத்தை தவறவிட்ட ராஜேந்திரன் கூறுகையில், நான் தேவதானப்பட்டியை சேர்ந்தவன். சொந்த விஷயமாக தேனி பழனி செட்டிப்பட்டிக்கு வந்தேன்.


வேலை முடிந்து திரும்ப வீட்டிற்கு செல்லும்போது பழனிசெட்டிபட்டியில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் நானும் எனது அண்ணனும் சென்றோம். ஆட்டோவிலிருந்து இறங்கிய பின்னரே கையில் கொண்டு வந்த பையை மறந்து ஆட்டோவில் வைத்து விட்டேன் என்பது எனக்கு நினைவுக்கு வந்தது.  உடனே ஆட்டோ ஓட்டுனருக்கு பை ஆட்டோவில் உள்ளது என்ற  தகவல் தெரிவித்தேன். அந்த பணத்தை ஆட்டோ ஓட்டுனர்  பத்திரமாக என்னிடம் ஒப்படைத்தார். அந்த பையிலிருந்த செல்போன் பணம் வீட்டு சாவி என அனைத்தும் பத்திரமாக எனக்கு திரும்ப கிடைத்தது" என்றார்.