முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்ட நேரத்தை தாண்டி சிலைக்கு மாலையிட தாமதமாக வந்ததாகவும் அதே சமயத்தில் ஓ.பி.எஸ்., தரப்பினரான முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் ஆதரவாளர்கள்  தலைமையில் மாலையிட வந்தனர். மேலும் அமமுக.,வை சேர்ந்த தொண்டர்களும் வந்து மாலையிட வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


மறைந்த அ.தி.மு.க., முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே நகரில் இருக்கக்கூடிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில் "கலைஞர் கருணாநிதி கூட ஜெயலலிதாவை அம்மையார் என மரியாதை அழைப்பார். இந்தியாவில் உள்ள தலைவர்கள் ஜெயலலிதாவின் திறமையை கண்டு பாராட்டினார்கள். ஜெயலலிதாவை போலவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை வழிநடத்தி செல்கிறார்.




எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் பணியாற்றுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது, ஜெயலலிதா மறைவிற்குப் பின்னே அதிமுக சுக்கு நூறாக உடைந்து விடும் என நினைத்தார்கள். பீனிக்ஸ் பறவையைப்போல அதிமுக வெற்றி நடைபெற்று வருகிறது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு மக்களுக்கு பல சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறது, கொரோனா, மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிக அளவில் பரவிக்கொண்டே இருக்கிறது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சென்னை மக்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், சென்னை மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வர வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம்.




2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது அதிமுக சிறப்பாக செயல்பட்டு மக்களை காத்தது, தற்போதைய சென்னை மழை வெள்ள பாதிப்புகளை திமுக தலைமையிலான அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது என திமுக அரசு கூறியிருந்தது, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம் வழங்க உள்ளோம், லண்டனில் உள்ள பென்னிகுயிக் நினைவிடம் மற்றும் சிலையை தமிழக அரசு அறிவித்தது போல பராமரிக்க வேண்டும், பென்னிகுயிக் நினைவிடத்தை பராமரிக்க தமிழக அரசு பணம் ஒதுக்கீடு செய்யவில்லை, பென்னிகுயிக் நினைவிடம் மற்றும் சிலையை பராமரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.




செல்லூர் ராஜூ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளரை சந்தித்துக்கொண்டிருக்கும் போது ஓ.பி.எஸ்., ஆதரவாளர் முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது தொண்டர்கள் செல்லூர் ராஜூவை பார்த்த உடன் ஓ.பி.எஸ்., வாழ்க என கோஷமிடத்தொடங்கினர். அதேபோல் அமமுக தொண்டர்கள் சின்னம்மா வாழ்க என கோஷமிட்டனர்.


இதனால் பேட்டியளித்துக் கொண்டிருந்த செல்லூர்  ராஜூ அங்கிருந்து விரைவாக பேட்டியை முடித்துவிட்டு கிளம்பினார்.  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்ட நேரத்தில் வராமல் தாமதமாக வந்ததால் பரபரப்பு ஏற்படுகிறது என காவல்துறையினர் நொந்துகொண்டனர்.