இந்தியாவில், காடைகள் காட்டுப் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன, ஆனால் கடந்த சில ஆண்டுகளில், காடை வளர்ப்பு ஒரு அற்புதமான வணிகமாக உருவெடுத்துள்ளது. காடை வளர்ப்பில் இருந்து வெறும் 30 முதல் 35 நாட்களில் நல்ல லாபம் ஈட்ட முடியும். அதே நேரத்தில், கோழிகளை விட காடை வளர்ப்பு மிகவும் எளிதானது. உண்மையில், கோழி பண்ணையில் குஞ்சுகள் மற்றும் கோழிகளை நோய்களில் இருந்து பராமரிப்பதால், பல மடங்கு நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆனால் காடை வளர்ப்பில் இத்தகைய பாதிப்பு மிகவும் குறைவு. மேலும், பிராய்லர் கோழி முட்டைகளுக்கு மாற்றாக பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்புவது நாட்டுக்கோழி முட்டைகளைத்தான். அதற்கு அடுத்தபடியாகக் காடை முட்டை உள்ளது.



காடைகளை வளர்க்க அதிகளவு முதலீடு தேவையில்லை. பயன்படுத்தாத கோழிப்பண்ணைகள் அல்லது குறைந்த முதலீட்டிலான கொட்டகைளில் காடைகளை வளர்க்கலாம். வசதிக்குத் தகுந்தாற்போல் ஆழ்கூளம் மற்றும் கூண்டுகளில் காடைகளை கூண்டு முறையில் காடைகளை வளர்க்கும்போது அவற்றிற்கு நோய்க் கிருமிகளின் தாக்கம் குறைவதுடன் காடைகளை கையாள்வதும் எளிதாக இருப்பதால் ஆழ்கூளத்தைக் காட்டிலும் கூண்டு முறையில் வளர்ப்பதே சிறந்தது. ஆனால், அவற்றிற்கு ஆரம்ப முதலீடு சற்று அதிகமாகத் தேவைப்படும்.





ஒரு நாள் வயதுடைய இறைச்சி வகை காடை குஞ்சுகள் சுமார் 8.10 கிராம் எடையுடையதாக இருக்கும். முதல் பத்து நாட்களில் பருவநிலைக்குத் தகுந்தாற்போல் முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக செயற்கை வெப்பமும், அதன் பிறகு 7 நாட்கள் இரவு நேரங்களில் செயற்கை வெப்பமும் அளிப்பது நல்லது. நல்ல முறையில் பராமரிக்கப்பட்ட இனப்பெருக்க காடைகள் மற்றும் குஞ்சு பொரிப்பான்களின் மூலம் பெறப்படும் காடை குஞ்சுகளில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவான உயிரிழப்பே காணப்படும்.





பொதுவாக முதல் இரண்டு வார வயதில் பெரும்பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரங்களில் விழுந்து இறக்கும் இழப்பே அதிகமாகும். காடை குஞ்சுகள் தண்ணீர் பாத்திரங்களில் விழுந்து இறப்பதைத் தவிர்க்க தண்ணீரினுள் கோலி குண்டுகள் அல்லது கூழாங்கற்களை ஒருவாரம் வரை இடவேண்டும். தண்ணீர் பாத்திரங்களுக்கு பதிலாக நிப்பிள் வகை தண்ணீர் அளிப்பான்கள்   மூலமும் தண்ணீர் கொடுக்கலாம். இவ்வாறு நிப்பிள் வகை தண்ணீர் அளிப்பான்களை பயன்படுத்துவதால் சுத்தமான தண்ணீரைக் தொடர்ச்சியாக காடை குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.


இந்த நிலையில், முதுகுளத்தூரை  சேர்ந்த செயது இஸ்மாயில் என்பவர் குளிர்பானங்களை விற்கும் கடையை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா  பொது முடக்கத்தால்  பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் முடங்கிக் கிடந்ததாலும்,  கடைகளை திறக்க முடியாமல் போனதாலும் வருமானம் இன்றி கடும் சிரமப்பட்டு  வந்துள்ளார்.


இந்த நிலையில் மாற்றுத் தொழிலாக காடை வளர்ப்பில் ஈடுபடலாம் என்று திட்டமிட்டுள்ளார் சைய்யது இஸ்மாயில். இதையடுத்து முதுகுளத்தூர் ஆற்று பாலம் அருகே ஓடுகளான கொட்டகை அமைத்து காடை வளர்ப்பு தொடங்கியுள்ளார். இதற்காக காடைக் குஞ்சுகளை ராமநாதபுரத்தில் இருந்து ஒரு குஞ்சு ஒன்பது ரூபாய்க்கு வாங்கி வந்து அதனை அதற்கேற்றாற்போல் தட்பவெப்பநிலையை கொடுத்து 30 நாட்கள் வளர்த்த பின்னர் ஒரு காடை  30 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கிறார்.





மேலும் காடை இறைச்சியில் மருத்துவ குணம் உள்ளதாகவும் இதனை உட்கொண்டால் கண்கள் நன்றாக தெரியும், எலும்பு வலுப்பெறும், இருமல் , சளி உள்ளிட்டவற்றை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணம் உள்ளதாக  இருப்பதால் வெளியூர் மற்றும் உள்ளூர் வாசிகள் அதிக அளவில் வந்து காடை கறிகளை  வாங்கி செல்வதாக தெரிவிக்கின்றனர்.இதனால் அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்ததோடு மேலும் தனது காடை வளர்ப்பை விரிவுபடுத்துவதற்காக அரசு மானியம் முறையில் கடன் உதவி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.