முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. யூடியூப் தொடர்பான விதிகள், சமீபத்திய சட்டத்திருத்தங்கள் மற்றும் முழு விபரங்களைத் தாக்கல் செய்ய, நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் காலஅவகாசம் வழங்க கோரியதால் வழக்கை ஒத்திவைத்தது மதுரைக்கிளை

 

சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

 



 

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி  தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி,  ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான். ஆகவே யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ன திட்டம் உள்ளது? என்பது குறித்து தமிழக அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ராமகிருஷ்ணனை நியமித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அது தொடர்பான விதிகள், சமீபத்திய சட்டத்திருத்தங்கள் மற்றும் முழு விபரங்களைத் தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டுமென கோரினார். இதையேற்ற நீதிபதி வழக்கை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

 



 





108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்க கோரிய வழக்கு - மத்திய, மாநில  அரசு சுகாதாரத்துறை செயலர்களிடம்  விளக்கம் பெற்று தெரிவிக்க  உத்தரவு

 

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த அரவிந்த், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான்  2021ல் நீட் தேர்வு எழுதினேன். நீட் தேர்வில் நான் 720 மதிப்பெண்களுக்கு 463 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். மேலும் நான் 2021-2022 இளங்கலை மருத்துவ  கவுன்சிலிங்காக மனு செய்துள்ளேன். எனது தந்தை பாலசுப்பிரமணியன் , 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநராக கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பணிபுரிந்து வருகிறார். அவர் கொரோனா முன்களப் பணியாளர்கள் பட்டியலில்  வருகிறார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மீட்டு மருத்துவ மனையில் சேர்ப்பதில்   முன்னிலையாக இருந்தார். எனவே, நடப்பு ஆண்டே எனக்கு அரசு மருத்துவ கல்லூரியில் MBBS மருத்துவ படிப்பில் ஒரு இடம் ஒதுக்க  உத்தரவிட வேண்டும்" என  கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசின் சுகாதாரத்துறை செயலர்களிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 1ம் தேதி ஒத்திவைத்தார்.