" பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு.....! அழகே பொன்னுமணி, சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்" என்று ரேடியோவில் கிழக்கு வாசல் திரைப்பட பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. களைப்பை நீக்கியபடி  தச்சுவேலையில் மும்மரம் காட்டினார் மல்லிகா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சுற்றியபோது பெண் ஒருவர் தச்சுவேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து வண்டியை நிறுத்தினோம். கதவுக்கு அன்னம் டிசைன் போட்டுக் கொண்டிருந்த மல்லிகா அக்காவிடம்  பேசினோம்.








 

" எனக்கு இந்த தொழில கத்துக் கொடுத்ததே என் வீட்டுக்காரர் தான். நானும் அவரும் தான் பல இடத்துக்கு டிசைன் போடப்போவோம். நல்ல வருமானம் கிடைச்சுக்கிட்டு இருந்தது. அந்த சமயத்தில தான் என் ஒரு பையன் இறந்துட்டான். துக்கம் தொண்டைய அடிச்சிருச்சு. அதுகப்பரம் சரியா வேலை செய்ய முடியல. என் கணவர் டாஸ்மாக் பக்கம் கவனத்த செலுத்த ஆரம்பிச்சிட்டாரு. அதனால குடும்பத்தில் வறுமையும் தலைதூக்கிருச்சு. போதாதுக்கு என் கணவர் குடிச்சுட்டு வண்டிய ஓட்டி விபத்து ஏற்படுத்திட்டாரு. அதனால  எனக்கு அதிக பளு  ஏறிடுச்சு. தொடர்ந்து வேலை செய்துட்டுவாரேன். பூ டிசைன், அன்ன டிசைன், சாமி டிசைனு எல்லா தச்சு வேலையும் செய்வேன். மிஷின்கள் வந்ததுக்கு அப்பரம் கைவேலைகளுக்கு நேரம் குறைவாதான் இருக்கு.



மகன் இறந்துட்டானு நானும் வீட்ட பார்க்காம விட்டுட்டா என்ன ஆகுறது ?.  அதனால தான் கடுமையா வேலை செய்றேன். என் கணவர் குடிய நிறுத்திட்டா போதும். ஓரளவு கஷ்டம் குறைஞ்சுடும். டாஸ்மாக் கடையினால பல வீடுகள் சிரமப்பட்டுக்கிட்டு இருக்கு. இதற்கு அரசு  தான் நடவடிக்கைகள் எடுக்கனும்" என்றபடி மரக்கட்டைய தேய்க்க ஆரம்பித்தார்.



பெண்கள் எல்லா தொழிலும் நிரம்ப ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க எல்லோரும் தொழில இஷ்டப்பட்டு தான் செய்றாங்கனு சொல்லிட முடியாது. மல்லிகா போன்ற பெண்கள் வீட்டின் கஷ்டங்களுக்காக வேலை செய்றாங்க என்பது தான் நிதர்சனம்.