கமுதி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியின் சுற்றுசுவர் அருகே உள்ள மின் கம்பத்தை அகற்றக் கோரிய மனுவை ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மின்வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர் 4 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கமுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கமுதி பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்து காணப்படும் நிலையில், வீடுகளில் மின் இணைப்பில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், வயர்மேன் மேலேறி பிரச்சனையை சரி செய்கிறார். இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மின்கம்பத்தின் அருகிலேயே டிரான்ஸ்பார்மர் ஒன்றும் அமைந்துள்ளது. ஒருவேளை ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மிகப் பெரும் விபத்தாக அமைய வாய்ப்புள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே கமுதி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியின் சுற்றுசுவர் அருகே உள்ள மின் கம்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்"என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மின்வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர் 4 வாரத்தில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வழக்கை முடித்து வைத்தனர்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்தக்கோரிய வழக்கு - திருச்சி மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு
திருச்சியைச் சேர்ந்த கேசவன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 24 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் 1000 வழக்கறிஞர்கள் வந்து செல்கின்றனர். நீதிமன்ற வளாகத்தில் 20 கழிவறைகள் உள்ளன. நீதிமன்றத்தை சுற்றியுள்ள அனைத்து கட்டிடங்களிலும் பாதாள சாக்கடை வசதி உள்ளது. ஆனால் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவு நீர் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, வழக்கு குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.