நவீன நாடகக் கலையை கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் இலவசமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார் மனோஜ்.
பள்ளிப் பருவம் - முதல் நாடகக் கலை
"கலைகள் அற்ற சமூகம் நீர்த்துப் போனதற்கு சமம்' என்கிற பண்பாட்டு பழமொழிக்கு உயிர் கொடுத்து வளர்த்தெடுக்ககும் முயற்சியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கருமாத்தூர் மனோஜ் களம் இறங்கி ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் தன் பள்ளிப் பருவத்தில், படிக்கும்போதே நாடகத்தில் ஈடுபாடு கொண்டு, கின்னஸ் சாதனை படைத்த "திசைகள்" கலைக்குழுவில் இணைந்தார். சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடங்கி, பின்னாளில் ஒரு கதாநாயகனாக பாத்திரமேற்று பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ஏறக்குறைய ஆயிரம் கிராமங்களில் சமூக விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி உள்ளார். தொடரந்து கருப்புக் காதல், விசேஷம் இந்த 2 நாடகங்களும் தமிழ்நாட்டில் பல மேடைகளில் அரங்கேறியது. "ஹிரோஷிமா" என்ற மேடை நாடகத்தில் 2-ம் உலகப் போரில் போடப்பட்ட அணுகுண்டால் ஏற்பட்ட சேதத்தையும் உயிரிழப்பையும் தத்துவமாக காட்டி, அதன் பின்னாளில் இருந்த அமெரிக்காவின் போர் வியாபார தந்திரத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி தன் நடிப்பால் அரங்கை அதிர வைத்தார்.
இயக்குநர் பாரதி ராஜாவுடன் பயணம்
மதுரை தமிழ்ச்சங்க கல்லூரியில் இளங்கலை இலக்கியம் மற்றும் முதுகலை ஆய்வு நிறைஞர் ஆகிய பட்டங்களை படித்து முடித்ததார். கருமாத்தூர் திசைகள் கலைக்குழுவின் கதைக்கருவையும், சாதனைகளையும் கிராமப்புறங்களில் நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கங்களையும் அறிந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு முறை நாடகத்தை நேரில் காண விரும்பினார் என்பது சிறப்பு. எழுத்திற்கு இணையாக மனோஜிடம் உள்ள நடிப்பாற்றலை கண்ட பாரதிராஜா பல்வேறு வாய்ப்புகளை அளித்தார்.
நவீன நாடக குழுவில் பயணம்
தொடந்து டெல்லியில் செயல்பட்டு வரும் தேசிய நாடகப் பள்ளி, தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் நாடகங்களில் 2011ம் ஆண்டில் தமிழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாடாகமான மணல் மகுடி குழுவின் முருக பூபதியின் நாடகம் தான். அந்த நாடகத்தில் தானும் ஒருவராக கலந்து கொண்டு நடித்ததை பெருமையாக நினைவு கூறுகிறார். மனோஜ்க்கு பிறப்போடு தோன்றிய நாடகக்கலை விதை திசைகள் கலைக்குழுவில் விழுந்து முளைத்து துளிர்த்தது. பின் முருகபூபதியின் மணல் மகுடி என்ற நாடககுழு நாற்றங்ககாலில் முதிர்ந்த நாற்றாகிவிட்டது. நல்ல மகசூழுக்கு நாற்றை தனியாக பிடுங்கி வயலில் நடுவது போல மனோஜ் தற்போது தனியாக நவீன நாடகக் கலையை இயக்கி வருகிறார். நடிகனாக இருந்த மனோஜ் நவீன நாடகக்கலைஞர் இயக்குநராக முழுமையாக மாறிவிட்டார். முதல் முயற்சியாக தான் படித்த மதுரை செந்தமிழ் கல்லூரியில் ஒரு நாடகத்தை நடத்த திட்டமிட்டார். அந்த கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஒரு மாத காலம் இலவச பயிற்சி கொடுத்து அதன் "மனித குரங்கு" என்ற நாடகத்தை அந்த கல்லூரியில் அரங்கேற்றினார். அப்போது நாக் குழுவின் அதன் உறுப்பினர்கள் இதை கண்டு களித்து மிகவும் பாராட்டினர். நாடகத்தின் சிறப்பை அறிந்த மதுரை மீனாட்சி கல்லூரி, மாணவிகளைகதேர்வு செய்து தொடர்ந்து 15 நாட்கள் இலவசமாக நவீன நாடகப் பயிற்சி அளித்து, ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளார். இந்த நாடகம் வரும் டிசம்பர் மாதம் நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
மேலும் கருமாத்தூர் மனோஜ் கூறுகையில், “நாடகம் என்பது ஒரு சில மணி நேரம் நடிகர்கள் மேடையில் தோன்றி நடித்துவிட்டு பார்வையாளர்களின் பாராட்டுகளையும் கைதட்டுகளையும் பெற்றவுடன் கடமை முடியக்கூடாது. மாறாக, நாடகத்தின் உட்கருத்து சமூக விழிப்புணர்வு செய்திகள் பார்வையாளர்களை நாடகத்தோடு பிணைக்க வேண்டும். மேடை நாடகங்கள் சமூகத்தில் வெறுமனே பொழுதுபோக்காக இருக்கக்கூடாது” என்றார்.