மதிச்சியம் பக்கம் பன்னண்டு பொட்டலம், கரும்பாலைக்கு பதினாலு, தெப்பகுளத்துக்கு எட்டு என்று உணவு பொட்டலங்களை பிரித்து வைத்துக் கொண்டிருந்தனர். ”போதும் என்பது உணவு மட்டும்தான், அதை பூர்த்தி செஞ்சுட்டா போதும் கொஞ்சம் சிரமத்தை குறைத்திடலாம்” என்கிறார்கள் ஸ்கூட்டர்களில் பறக்கும் மதுரை சிங்கப்பெண்கள்.

 



ஊரடங்கை தவிர வேறு வழியில்லை என தமிழக அரசு முழு ஊரடங்கை நீட்டித்தது. இதன் பலனாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் தணிந்தது. தற்போது பல்வேறு கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டுவருகிறது. பலரும் எப்போது ஊரடங்கு முழுமையாக முடியும் என காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் பலரும், உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.



 

அசாதாரண சூழலில் கொரோனாவுக்கு எதிரான களத்தில் பணி செய்துவருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை கடுமையாக வீசிய போதும் தொடர்ந்து மனித நேயத்தை ஆங்காங்கே பார்க்க முடிந்தது கொரோனா சமயத்தில் உதவும் ஒவ்வொரு மனிதரும் கடவுளா பார்க்கப்படுகின்றனர். இந்நிலையில் மதுரை நகர் பகுதியில் பசியால் வாடிய நபர்களுக்கு தாயுள்ளம் கொண்டு குடும்ப பெண்கள் சிலர் உணவு வழங்கியதை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு இடமாக தங்களது இரு சக்கர வாகனத்தில் தேடி, தேடி உணவு கொடுத்துக்கொண்டிருந்தனர்.  அவர்களிடம் விசாரித்துவிட்டு மறுநாள் அண்ணாநகர் பகுதியில் அவர்கள் உணவு தயாரிக்கும் இடத்திற்கே சென்றோம்.

 



உணவு பொட்டலங்களை தோழிகளுடன் பார்த்து, பார்த்து மடித்துக் கொண்டிருந்த கவிதாவிடம் பேசினோம்," நாங்க ஊரடங்கு நேரம் மட்டுமில்ல எப்போதுமே ஆதரவற்றவங்களுக்கு  ஒரு வேலை சாப்பாடு குடுக்குறோம். நாங்கனா..., நாங்க நாழு பேர் மட்டுமில்ல, 70 குடும்பங்கள் சேர்ந்துதான் இந்த பணிய செய்றோம்.  70 குடும்பத்தினரும் தங்களால முடிஞ்ச பணத்த சேர் பண்ணிப்போம். அத மூலதனாம வச்சு தொடர்ந்து உதவி பண்றோம். எப்பவும் 100 சாப்பாடு குடுப்போம் இப்ப கொரோனா டயத்துல 400 சாப்பாடு குடுக்குறோம். தயிர் சாதம், தக்காளி சாதம், வெஜ் பிரியாணி, முட்ட சாதம், சாம்பார் சாதம், ரசம் சாப்பாடுனு மாறி, மாறி கொடுக்கிறோம். பெண்கள், ஆண்கள்னு பாரபட்சம் இல்லாம பணி செய்றோம்.



மதுரை நகர்பகுதி முழுசரா சுத்துறோம். உதவி கேட்கும் நபர்களுக்கு எங்க உதவிய செய்றோம். சமைக்க முடியிற நபருக்கு அரிசி, மளிகை பொருட்கள வழங்குறோம். முடியாத, ஆதவற்றவங்களுக்கு உணவாக  குடுத்துறுவோம். சிட்டிக்குள்ள யாரு மருந்து, மாத்திர கேட்டாலும் அத வாங்கி கொடுக்குறோம். வெளிய வரமுடியாதவங்க பழங்கள் கேட்டா கூட வாங்கி கொடுக்குறோம். அதற்கான பணம் கொடுத்தா வாங்கிப்போம். ’இல்லேனு’.., சொன்னா திருப்பி கேட்க மாட்டோம். ஆதரவற்ற உடல்கள எங்களுடைய பணத்தில் இருந்து அடக்கம் செய்வோம். இப்படி எங்களால என்ன, என்ன முடியுதோ அந்த உதவிகள் அனைத்தையும் செய்றோம். பைக் வச்சுருக்க பெண்கள் நாங்க ஒரு பக்கம் ரவுண்டு அடிச்சு சாப்பாடு குடுக்குறோம். அதிக தூரம் உள்ள இடங்களுக்கு  பசங்க போவாங்க. தமிழக அரசு சமூக ஆர்வலர்கள வெகுவா பாராட்டிருக்கு. அது போன்ற சின்ன ஊக்கம் இருந்தா போதும் உயர பறந்து உதவி செய்வோம்" என்று ஸ்கூட்டரை கிளப்பினார்கள் அந்த சிங்கப்பெண்கள்.