தென் மாவட்டங்களில் முக்கியமான மலர்ச் சந்தை மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட். இங்கு உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மலர் விலை ஏற்ற, இறக்கம் மதுரை பூ மார்கெட்டிலும் முதன்மையாக கவனிக்கப்படுகிறது. இந்த பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் வரை அதிகளவு மலர்களை வாங்கிச் செல்வார்கள். இங்குள்ள மலர் கமிஷன் கடையை பெண் ஒருவர் நிர்வகித்து வருகிறார். அவருக்கு பின்னால் சோகங்களை தவிர்த்து பல்வேறு தன்னம்பிக்கை எண்ணங்கள் மேலோங்கி இருக்கிறது. 



 

மதுரை பூ மார்கெட்டில் எஸ்.ஆர்.பி., கமிஷன் கடையும் முதன்மையான ஒன்று. இதனை 34 வருடங்களுக்கு மேல் நிர்வகித்து வந்தார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். போதாத காலம் கொரோனா அலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். அதற்கு பின் தன்னம்பிக்கை இழக்காத பாலசுப்ரமணியனின் மனைவி அனுசியா இந்த கமிஷன் கடையை கையில் எடுத்தார். தற்போது தன் கணவரைப் போல கமிஷன் கடையை சிறப்பாக நடத்தி வருகிறார். மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் கமிஷன் கடைகளை ஆண்கள் நிர்வகிக்கும் இடத்தில் பெண்ணாக இருந்து கமிஷன் கடையை நடத்தி வரும் அனுசியா அவர்களை சந்திக்க மாட்டுத்தாவணி பூ மார்கெட்டுக்கு சென்று அவரிடம்  பேசினோம், "எனக்கு சொந்த ஊர் ஒசூர். திருமணம் முடிந்து என் கணவருடன் மதுரையிலேயே செட்டில் ஆகிவிட்டோம். என் கணவர் இறந்தது எங்கள் குடும்பத்திற்கு பெரும் இழப்பு.



ஆனால் சோர்ந்துவிடக்கூடாது என்று கணவரின் தொழிலை கையில் எடுத்தேன். அதற்கு முன்பு கமிஷன் கடை பக்கமே எட்டிப்பார்த்தது இல்லை. அவருக்கு சாப்பாடு கொடுக்க  வரும் போது  கூட மார்கெட்டுக்கு வெளியில் நின்று கொடுத்துவிட்டு சென்று விடுவேன். இந்த சூழலில் தான் நான் இந்த தொழிலை முழுமையாக பார்க்கிறேன். முதல் மூன்று மாதம் சிரமமாக இருந்தது அதற்குப் பின் தொழில் பழக்கமாகிவிட்டது. இப்போது கிட்டதட்ட 2 வருஷமா தொழில் செய்கிறேன். எங்களுக்கு 2 பொண்ணுங்க முதல் பொண்ணு திருமணமாகி அவரின் கணவருடன் நெதர்லாந்தில் வசிக்கிறார். இரண்டாவது பொண்ணு படிப்பு முடிச்சுட்டு பிரண்ட்சுக கூட சேர்ந்து வால்பெயிண்டிங்  செய்றாங்க. கமிஷன் கடை போக  விவசாயம் பண்றோம். 17 ஏக்கரில் மாமரம் நட்டு பராமரிக்கிறோம். லீசுக்கு விட்டதால அதில் சிரமம் இருக்காது.



 

கமிஷன் கடைய மட்டும் முழுசா கவனுச்சுகிறேன். சம்மங்கி, மெட்ராஸ் மல்லி, கோழிக் கொண்டை, ரோஸ்,  மெட்ராஸ் ரோஸ் உள்ளிட்ட பல்வேறு பூக்களை அதிகளவு வியாபரிகளுக்கு கொடுக்கிறோம். தொழிலை எப்போதும் சிறப்பா செய்யனும்னு என் கணவர் வழியில், தொழிலாளர்களையும், பூக்கள் கொடுக்கும் விவசாயிகளையும் உறவினர் போல பாத்துக்குவேன். அவங்க குடும்ப கஷ்ட நஷ்டம், விஷேஷம் பணத் தேவைக்கு அட்வான்ஸா கொடுத்து ஆதரச்சுக்குவேன். அதனால் என் கணவரைப் போல் என்னையும் நாணயம் உள்ள நபராக பார்த்து எல்லோரும் சப்போர்ட் செய்றாங்க. எல்லாருக்கும் எல்லா சூழலிலும் கஷ்டம் இருக்கும் எதையும் கவனமாக கையாண்டா கண்டிப்பாக ஜெயிக்க முடியும்"என்றார் நம்பிக்கையாக.

 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண