தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களில் மட்டும் அதிக அளவு கொலைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக நெல்லையில் 2 நாளில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ளன. இதனால் பழிக்குப் பலி அதிகரிப்பதாக 8 மாவட்ட போலீஸ் பாதிப்பு அளித்து வருகின்றனர். அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு வாரத்தில் 6 கொலைகள் நடைபெற்றுள்ளன.



மதுரை மேலூர் பகுதியில் ஆதிக்க சாதியினரால் தூய்மை பணியாளர் அடித்து கொள்ளப்பட்டார். தென்மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக  அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து மூத்த வழக்கறிஞர் மேலூர் செல்லப்பாண்டி நம்மிடம், “போதைப் பொருள் காரணமாகவே அதிக குற்றசம்பவங்கள் நடைபெறுகின்றன. போதைப்பொருள் அடிப்படையில் தான் 90% குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.



காவல்துறையினரை அதிகப்படுத்தாமல் கஞ்சா விற்பனையை எவ்வாறு குறைக்க முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி போதைப் பொருள் அடிப்படையில் குற்றங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சட்ட விரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்கள் காவல்துறையினர் சிலருக்கு பணம் கொடுப்பதால், குற்றம் செய்யும் நபர்களுக்கே காவல்துறையினர் சிலர் உடந்தையாக இருக்கின்றனர்.



மறைமுக புகார் அளித்தால் கூட, யார் புகார் அளித்தார் என்பதை குற்றவாளிகளிடம் சொல்லிவிடுகின்றனர். இதனால் புகார் அளிக்க கூட யாரும் முன் வருவதில்லை. எனவே போதை தடுப்புப் பிரிவினரை கூடுரலாக நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தினால் முக்கால்வாசி குற்றங்களை குறைக்கலாம். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை சாதிய கொலை அதிகளவு நடைபெறுகிறது. குறிப்பாக மேலூர் பகுதியில் இது போன்ற அதிக சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கண்காணிப்பு அமைப்பு இது தொடர்பான கூட்டம் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மேலூர் பகுதியில் பதவி ஏற்கும் டி.எஸ்.பிகள் கூட முறையாக விசாரணை நடத்துவதில்லை. அடிமட்ட காவல்துறையினர் சொல்வதை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர்.



உள்ளூர் போலீஸ்கள் அதிகளவு இருப்பதால் உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளிக்கின்றனர். சாதிய இந்துக்களாக செயல்படும் சில காவல்துறையினர் குற்றங்களை மறைக்க முயற்சி எடுக்கின்றனர். கர்ணன் திரைப்பட காட்சிகள் போல உயர் அதிகாரிகளுக்கு தவறான கண்ணோட்டத்தை விதைக்கின்றனர். புகார் அளிக்கக் கூட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. வழக்கு பதிய தனி போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இப்படி எளியவர்களுக்கு எதிரான ஒவ்வொரு வழக்கிற்கும் போராட்டமாக தான் இருக்கிறது.



தொடர் குற்றசம்பவங்களை நிகழ்த்தும் நபர்கள் கொலை குற்றங்கள்வரை செல்லும் போது கூட குண்டாஸ் போட தயங்குகின்றனர். குற்றவாளிகளுக்கு தகுந்தது போலவே வழக்குகள் மாற்றியமைக்கப்படுகின்றன.  எனவே காவல்துறையில் உள்ளூரில் இருந்துகொண்டு சாதிய வன்மத்தோடு செயல்படும் நபர்களை வெளியூருக்கு மாற்ற வேண்டும். நீண்ட வருடங்களாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றும் நபர்களையும் மாற்ற வேண்டும். நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும். மேலும் தீண்டாமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மேலூர் பகுதியில் சிறப்பு சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதிக சாதிய கொலைகள் நடக்கும் பகுதியாக மேலூரை அறிவிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.