ஆகாய தாமரையால் மூழ்கிய வைகை ஆறு -  மழை நீர் ஆற்றில் செல்ல முடியாததால், வெளியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்பதால் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் - வெள்ளம் வருவதற்கு முன்பு அகற்றப்படுமாக ஆகாயதாமரை? மாநகராட்சியோ? பொதுப்பணித்துறையோ? ஆகாய தாமரைகளை அகற்றி வரும் நீரை சரியாக பயன்படுத்துவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:


இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி கடந்த சில நாட்களாக  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.





ஆகாய தாமரை:


மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய மழை நீர் மற்றும் வைகைக் கரையோரங்களில் இருக்கக்கூடிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் வைகை ஆற்றில் தற்பொழுது வரத் தொடங்கியுள்ளது.  இந்நிலையில் வைகையாற்று பகுதிகளான ஆரப்பாளையம் மற்றும் யானைக்கல் பகுதிகளில் ஆகாயதாமரை செடிகள் முழுமையாக ஆற்றையே மூழ்கடிக்கும் அளவிற்கு வளர்ந்து பரவி காணப்படுகிறது.




இதனால் ஆற்றில் உள்ள மழைநீர் செல்ல முடியாத நிலையில் ஆற்றின் ஓரப்பகுதியான யானைக்கல் தரைப்பாலம் மற்றும் ஆழ்வாரபுரம் தரைப்பாலம் பகுதி  முழுவதுமாக மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 




மேலும் அந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் மாணவ, மாணவிகளும் பாலத்தின் கீழ் நடந்து சென்று வருவதால் அந்தப் பகுதி முழுவதிலும் தேங்கிய மழைநீரில் நனைந்தபடி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் யானைக்கல் தரைப்பால பகுதியில் வைகையாற்று கரையோரங்களில் போக்குவரத்து நெரிசல் உருவாகின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையிலாவது. மாநகராட்சியோ? பொதுப்பணித்துறையோ? ஆகாய தாமரைகளை அகற்றி வரும் நீரை சரியாக பயன்படுத்துவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.