உசிலம்பட்டி அருகே 17 வயது பட்டியலின சிறுவர் மீது மாற்று சமுகத்தினர் சாதிய வன்கொடுமை செய்த வழக்கில்  முதற்கட்டமாக 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மதுரை உசிலம்பட்டியில் இளைஞர்கள் மீது தாக்குதல்

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்த 17 வயது பட்டியலின சிறுவர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு டிரம்ஸ் வாசிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 16- ஆம் தேதி பொங்கலன்று இவரை கடத்தி சென்ற மாற்றுச் சமுதாய இளைஞர்கள், முன்பகை காரணமாக அவர் மண்டியிட வைத்தும், காலில் விழ வைத்தும், சிறுவர்களை வைத்து சிறுநீர் கழித்து சாதிய வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டி உள்பட 6 பேர் மீது சாதிய வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பட்டியலின சிறுவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறும் குற்றச்சாட்டு தவறானது என மதுரை மாவட்ட எஸ்.பி.அர்விந்த் அறிக்கை வெளியிட்டார்.

 

போலீஸ் விசாரணை

 

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தொடர்புடைய சங்கம்பட்டியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இஅவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிஷோர் உள்ளிட்டோர் மட்டுமே பட்டியலின சிறுவனை தாக்கியதாகவும், நாங்கள் உடன் மட்டுமே இருந்தோம், நாங்கள் ஏதும் செய்யவில்லை என தெரிவித்தாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.