மதுரை மாவட்டம் மேலூர் சட்ட மன்ற தொகுதி மிகப்பெரிய கிராமம் என்று தான் சொல்லவேண்டும். பல்வேறு கலாச்சார கிராமங்களை கொண்ட மேலூர் சட்ட மன்ற தொகுதியை முத்திரையர் இன மக்களின் வாக்கு தான் தீர்மானிக்கிறது. 60 %க்கும் அதிகமான முத்திரையர் இனமக்கள் சட்ட மன்ற தொகுதியில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேலூர் நகராட்சி தேர்தலில் அப்படி இல்லை மற்ற சமுதாய மக்களின் வாக்கு தான் அதிகளவு உள்ளது. 27 வார்டுகளை கொண்ட மேலூர் நகராட்சியில் தி.மு.க - அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க.வில் 22 வயது இளம் வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார். அதே போல் அ.தி.மு.கவில் கணவன் மனைவி இருவருக்கும் வெவ்வேறு வார்டுகளில் கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் திருமணமாக, சில நாட்களே உள்ள அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலூர் நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 22 வயது பி.பி.ஏ படித்த இளைஞரான ரிஷிக்கு தி.மு.க தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. ”இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்று தமிழக முதல்வர் காலடியில் வெற்றியை சமர்ப்பிப்பேன்” என வேட்பாளர் ரிஷி தெரிவித்துள்ளார். திமுக சார்பில் 19வது வார்டு சிவன் கோவில் தெருவில் வார்டு உறுப்பினராக போட்டியிட 22 வயது பட்டதாரி இளைஞர் ரிஷிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், மேலூர் சந்தைபேட்டையை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் சாகுல்ஹமீது 19 வது வார்டு நகர்மன்ற உறுப்பினருக்கு போட்டியிடுகின்றார். இதேபோல அவரது மனைவி 5 வது வார்டு நகர்மன்ற உறுப்பினருக்கு அதிமுக சார்பில் போட்டியிடுகின்றார். கணவன் மனைவி இருவரும் அதிமுக சார்பில் வேட்புமனுக்களை நகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதுவும் மேலும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதே போல் மேலூர் நகராட்சி 23வது வார்டு வேட்பாளராக அதிமுக சார்பில் மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஜெ பேரவை மாவட்ட செயலாளருமான தமிழரசனின் மகன் திவாகர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலூர் கக்கன் சிலையிலிருந்து கட்சியினரும் ஊர்வலமாக வந்த திவாகர் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.திவாகருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு செய்திகள் மேலூர் வார்டு தேர்தலை கலகலப்பு செய்துள்ளது.