சென்னையில் சினிமா எடுத்தாளும் அதன் வெற்றி மதுரையில் தான் எதிரொலிக்கும். சினிமாவோ, அரசியலோ அது மதுரையில் இருந்துதான் புறப்பாடாகிறது. மதுரையில்தான் கொண்டாட்டங்கள் அதிகம். தேர்தல் களங்களிலும் அப்படி தான் இருந்துவருகிறது. தேர்தலில் நிற்கும் பெண் வேட்பாளர்களின் தோற்றம் ஒரே வழித்தடத்தில் வந்துகொண்டிருந்தது. அரசியலில் இருக்கும் பெண்கள் என்றால் பெரிய பொட்டு வச்சுக்கனும். கழுத்து நிறைய தங்க நகை போட்டுக்கனும், கையில் முரட்டு வளையல்களும், பெரிய சைஸ் மோதிரங்கள் என்று பிரமாண்ட தோற்றத்தில் இருக்கும் மூத்த பெண் நிர்வாகிகள் தான் அதிகளவு தொடர்ந்து தேர்தலில் களம் கண்டு வந்தனர்.
இந்நிலையில் சமீப காலமாக இளம் பெண் வேட்பாளர்களும், பட்டதாரி பெண்களும் அதிகளவு தேர்தலில் நின்று வருகின்றனர். இந்த வரிசையில் மதுரை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மருத்துவத்துறை, அழகு கலைதுறையில் பணிபுரியும் இளம் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் மையங்கள் பரபரப்பாக காணப்பட்டது. தற்பொழுது பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 % உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து வார்டுகளிலும் இளம் பெண்கள் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து இளம் பெண் வேட்பாளர்கள் சிலரிடம் பேசினோம். 22 வயதுடைய செவிலியர் இலக்கியா..,” என்னை போன்று மருத்துவ துறையில் பணி செய்யும் பெண்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதன் மூலம் சமூகத்திற்கு பல நல்ல விசயங்களை செயல்படுத்த முடியும். அடிப்படை தேவையை உணர்ந்து பணியாற்றுவார்கள். நான் மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரை மாநகராட்சி 14 வது வார்டில் போட்டியிடுகிறேன். எனக்கு மக்கள் வாய்ப்பளித்தால் மக்களின் அடிப்படை தேவையை முழுமையாக பூர்த்தி செய்வேன்” என தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் 22 வயது இளம் மாணவி மோகனா...,” மதுரை மாநகராட்சி 28வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். மக்களின் அடிப்படை வசதி, மக்களின் வளர்ச்சி மேம்பாட்டில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். தேர்வெழுத இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மக்கள் சேவையை செய்யும் வாய்ப்பை பெறும் முயற்சியாக தேர்தலில் போட்டியிடுகிறேன். இளம் பெண்கள் தயக்கம் இல்லாமல் அரசியலுக்கு வந்து மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 12- வது வார்டில் போட்டியிடும் மருந்தாளர் (pharmacist) சாந்தா ஜெனிபர்....,” மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் வாய்ப்பு வழங்கினால் மருத்துவ சேவையை பொது சேவையாகவும். நான் போட்டியிடும் வார்டில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவேன்” என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
லதா பிரியதர்ஷினி அழகு கலை நிபுணர், ”சிறு வயது முதலே மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகிறது. அதனை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது தேர்தலில் போட்டியிடுகிறேன். பெண்கள் தயக்கம் இல்லாமல் இந்த சமுதாயத்தில் அரசியல் வாழ்வில் சேவைப்பணியில் சாதிக்கலாம். மதுரை மாநகராட்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 8 வது வார்டில் போட்டியிடுகிறேன். மக்கள் நினைத்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று சேவையாற்றுவேன்” என தெரிவித்தார்.
மதுரை மண்டலம் 4ல் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 78வது வார்டு கோவலன் நகரில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் பி.இ எம்.பி.ஏ பட்டதாரியான மதுமிதா அசோகன், மதுரையை எரித்த கண்ணகியை போல கையில் சிலம்பை ஏந்திவாறு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். குற்றம் செய்யாத கோவலனுக்கு எப்படி தண்டனை கிடைத்ததோ அதே போல எந்த ஒரு குற்றம் செய்யாத மக்களுக்கு தொடர்ந்து தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த முறை அப்படி நிகழாமல் மக்கள் மக்கள் நீதி மையத்திற்கு வாக்கைச் செலுத்தி கட்சியை வெற்றி பெற வைப்பார்கள் என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Urban Local Body Election: ‛கிருஷ்ணர் காப்பாற்றுவார்...’ சிலையோடு வந்து மனுத்தாக்கல் செய்த மதுரை காங்கிரஸ் வேட்பாளர்!