தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவிக்காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.




அதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணிகள் அரசியல் கட்சிகளிடம் இறுதியாகி, விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் இறுதி நாளான இன்று அதிகளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.






இந்நிலையில் மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரான லட்சுமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் 61 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காத நிலையில், உடனடியாக மதுரை மாநகர் மாவட்ட பி.ஜே.பி தலைவர் டாக்டர். சரவணனை சந்தித்து தன்னை பி.ஜே.பியில் இணைத்து கொண்டார். பி.ஜே.பியில் இணைந்த லட்சுமிக்கு 61 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், பி.ஜே.பி பெண் வேட்பாளர் லட்சுமி மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்திற்கு எளிய முறையிலும், வித்தியாசமாக சைக்கிள் ரிக்‌ஷாவில் தாமரை மலரை ஏந்திய படி வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். முன்னதாக  வேட்பாளரின் உறவினர்களும்  ரிக்‌ஷாவில் வந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.




அதே போல் மதுரை மாநகராட்சி 94  வார்டுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் சுஜாதா ஹர்ஷினி திருநங்கை வேட்புமனு தாக்கல் செய்தார்.