வாக்காளர்களை நம்பி களமிறங்கும் வேட்பாளர்களை பார்த்திருப்பீர்கள். இங்கு ஒருவர் கடவுளை நம்பி களமிறங்கியிருக்கிறார். திமுக கூட்டணி சார்பில் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தான், அந்த நம்பிக்கைக்கு சொந்தக்காரர்.
தமிழ்நாவு முழுவதும் வேட்புமனுத்தாக்கலுக்கு கடைசி நாளான இன்று, பலரும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சில வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி, மதுரை முத்துப்படி பகுதியான 73 வார்டில் காங்கிரஸ் கட்சியின் போஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மதுரை மாநகராட்சியின் மண்டலம் 4 ன் கீழ் வரும் அந்த வார்டிற்கான வேட்புமனு தாக்கல் செய்ய, மண்டலம் 4 அலுவலகம் வந்த போஸ், கழுத்தில் காங்கிரஸ் கட்சியின் துண்டு, ஒரு கையில் வேட்புமனு, மற்றொரு கையில் கிருஷ்ணர் சிலையோடு வந்தார்.ஏன் இவர் சிலையோடு வந்தார் என்பது யாருக்குமே தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த அவரிடம், ‛என்ன சார்... கையில் சிலையோடு வந்திருக்கீங்க...’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த போஸ், ‛தம்பி... கிருஷ்ணர் மீதுள்ள நம்பிக்கையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டேன். கட்டாயம் கிருஷ்ணன் என்னை வெற்றி பெற வைப்பார். எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது. அதனால் தான் கையில் கிருஷ்ணர் சிலையோடு வந்துள்ளேன்,’ என்றார். தனக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகவும், அதோடு கடவுளின் ஆசியும் சேர்ந்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும் என்று தான் நம்புவதாகவும் அப்போது போஸ் தெரிவித்தார்.
கடவுளை மட்டும் தான் கூட்டணிக்கு அழைக்காமல் இருந்தார்கள், இப்போது பிரச்சாரத்திற்கே அழைத்து வந்துவிட்டார்கள் என்று ஆச்சிரியம் கொண்ட சிலர், இதுவும் ஒரு யுக்தியாக கூட இருக்கலாம் என கிசுகிசுத்துக் கொண்டனர்.
வேட்புமனுவே இந்த கலக்கு கலக்குறாரே... இனி பிரச்சாரம் செய்ய வந்தால், அவ்வளவு தான் என அட்ராசிட்டியை நினைத்து அலறிப் போனவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். சிலர், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை கவர வேட்பாளர் கையில் எடுத்திருக்கும் அஸ்திரம் இது என்றும் கூறிவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்