பாஜகவின் மதுரை மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள், வைகை ஆற்றின் கரையோர மறுசீரமைப்பு பணிகள், பழமையான இடங்களை மேம்படுத்துவதற்கான பணிகள், பழ சந்தைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், பல்நோக்கு வாகன நிறுத்தம், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்குகள், சாலைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல் என சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழமையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஜான்சிராணி பூங்கா அருகே பழங்கால பஜார் அமைப்பது, சித்திரை வீதிகளை புனரமைப்பது, குன்னத்தூர் சத்திர கட்டுமானம், விளக்குத்தூண் மற்றும் பத்துதூண் சந்து பகுதிகளை புனரமைப்பது ஆகிய பணிகளுக்காக 42 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜான்சிராணி பூங்கா அருகே இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாரம்பரிய பஜார் எனும் பெயரில் 12 கடைகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பழங்கால பொருட்கள் விற்பனை செய்வதற்காக கட்டப்பட்டுள்ளது. இதற்காக நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கடைகளுக்கான ஏலம் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அந்த டெண்டரில் துரதிஸ்டவசமாக இரண்டு கடைகள் மட்டுமே பழங்கால பொருட்கள் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இச்செயல் விதிகளை மீறுவதாக மட்டுமின்றி என்று பாரம்பரிய பஜார் கட்டப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது. ஆகவே பாரம்பரிய பஜாரின் 12 கடைகளுக்காக நடத்தப்பட்ட டெண்டரை ரத்து செய்து அனைத்து கடைகளிலும் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு வெளிப்படையாக ஏலத்தை நடத்த உத்தரவிட கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய பஜாரில் உள்ள கடைகளை பழங்கால பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு பழங்கால பொருட்கள் விற்பனைக்காக அமைக்கப்பட்ட கடைகளை வேறு காரணத்திற்காக ஏன் ஒதுக்கினீர்கள்? என கேள்வி எழுப்பினர்.மதுரை மாநகராட்சி தரப்பில், "பழங்கால பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே கடைகளை ஒதுக்க வேண்டுமென விதி ஏதுமில்லை. பாரம்பரிய பஜார் என்பது பெயர். அதற்காக அனைத்து கடைகளையும் பாரம்பரிய பொருட்கள் விற்பனைக்காக மட்டுமே ஒதுக்க வேண்டுமென விதி இல்லை" என தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள்," ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? பாரம்பரிய பஜார் என பெயரைப் பார்த்து பழங்கால பொருட்களை வாங்கச் செல்லும் மக்களுக்கு, அங்கு தேவையற்ற பொருட்கள் மட்டுமே கிடைக்கும் எனில் ஏன் அவர்கள் அங்கு செல்ல வேண்டும்? பல நூறு ரூபாய்களை செலவழித்து அங்கு செல்பவர்களுக்கு மது போன்ற தேவையற்ற பொருள் கிடைக்குமெனில் ஏன் அந்த பணத்தை அவர்கள் விரையம் செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து, இந்த பஜார் கட்டுமானத்திற்கான நிதி யாரால் ஒதுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.அதற்கு மாநகராட்சி தரப்பில்," 50% நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. அந்த அறிவிப்பில் பழங்கால பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென விதி இல்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், " அந்த அறிவிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து, டிசம்பர் 3ல் நடைபெற்ற பாரம்பரிய பஜார் கடைகள் ஒதுக்கீடு தொடர்பான ஏலத்தில், மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர் தரப்பில் பழங்கால பொருட்கள் எனில் அவை குறித்து விபரங்களை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து," மதுரை மாநகராட்சி தரப்பிலேயே பழமையை எவ்வாறு அதன் தன்மை மாறாமல் புனரமைப்பது என்பது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். மதுரை மிகவும் பழமையான நகரம். மக்கள் வெளியிடங்களில் வரும்போது ஆச்சரியமாக பார்க்கின்றனர். ஆனால் அங்கிருக்கும் ஆக்கிரமிப்புகள் தான் கவலை தருவதாக உள்ளது. கோவிலுக்கு அடைவதற்கே சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.