திண்டுக்கல் மாவட்டத்தில் பூக்கள், காய்கறிகள் என அதிகளவில் விவசாயம் செயப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கருப்பு திராட்சை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சிறுமலை அடிவார பகுதியில் திராட்சை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. அதன்படி வெள்ளோடு, காந்திகிராமம், தொப்பம்பட்டி, அமலிநகர், கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளில் திராட்சை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சிறுமலை அடிவாரத்தில் பயிரிடப்படுகிற திராட்சைக்கு எப்போதுமே டிமாண்ட் உள்ளது. குறிப்பாக இங்கு பயிரிடக்கூடிய கருப்பு திராட்சை, கூடுதல் சுவை கொண்டதாக இருக்கும். வருடத்துக்கு 2 முறை திராட்சை அறுவடை செய்யப்படுகிறது.
6 மாதத்துக்கு ஒருமுறை திராட்சை பழங்களை அறுவடை செய்யலாம். கொடிகளிலேயே அழுகும் அவலம் தற்போது சிறுமலை அடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களில் கொத்துக்கொத்தாக திராட்சை பழங்கள் காய்த்து தொங்குகின்றன. அதனை அறுவடை செய்து, விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், தற்போது திராட்சை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் செலவழித்த தொகை கூட கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.
திராட்சை விலை உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. உற்பத்தி செலவு கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் திராட்சை பழங்களை பறிக்காமல், கொடிகளிலேயே அழுக விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 2,500 கிலோ மகசூல் பல ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் இருந்த சிறுமலை அடிவார பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளாக பலத்த மழை பெய்ததால் நிலத்தடி நீர் உயர்ந்தது. இதனால் திராட்சை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக பல ஏக்கர் பரப்பளவில் திராட்சை பயிரிடப்பட்டது. இதுகுறித்து திராட்சை பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு திராட்சை விளைவிக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை செலவு ஆகிறது. நல்ல விளைச்சல் என்றால், ஏக்கருக்கு 2 ஆயிரம் முதல் 2,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். கிலோ ரூ.17-க்கு விற்பனை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வரை வியாபாரிகள், தோட்டத்துக்கே நேரடியாக வந்து பழங்களை கொள்முதல் செய்தனர். ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.80 வரை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டமில்லாமல் திராட்சை ஒரு லாபகரமான பயிராகவே இருந்து வந்தது.
ஆனால் தற்போது திராட்சை விலை அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. கடந்த ஆண்டில் ஒரு மாதம் மட்டுமே அதிகபட்சமாக ஒரு கிலோ திராட்சை ரூ.40 க்கு விற்பனையானது. அதன்பிறகு ரூ.17 முதல் ரூ.32 வரை விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால் கடந்த 15 தினங்களாக கிலோ ரூ.17-ஐ தாண்டவே இல்லை. ஒரு கிலோ திராட்சை ரூ.40-க்கு குறையாமல் விற்பனையானால் மட்டுமே நஷ்டம் ஏற்படாமல் விவசாயிகள் தப்பிக்க முடியும். ஆனால் இந்த ஆண்டில் திராட்சை பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே திராட்சை பயிரிட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். விலை வீழ்ச்சி அடையும்போது, திராட்சையை பதப்படுத்தி வைத்து மீண்டும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்