வெந்தயம், கற்றாழை, விளக்கெண்ணை  உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டு வழுக்கு மரம் தயார் செய்யப்படுகிறது.

 

மதுரையின் வீர விளையாட்டு

 

ஜல்லிக்கட்டு, கபாடிப்  போட்டி உள்ளிட்ட வீர விளையாட்டுக்களை விரும்பும் மதுரை மாவட்டதில், வழுக்குமரம் ஏறும் போட்டிக்கும் இடம் உண்டு. நத்தம் மாரியம்மன் கோயிலைப் போல் மதுரை வடக்குமாசி வீதியில் நடைபெறும் மற்றும் திருப்பாலையில் நடைபெறும் வழுக்கு மர போட்டியும் சிறப்பாக இருக்கும். இந்நிலையில் இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருப்பாலையில் நடைபெற்ற வழுக்கு மர போட்டியில் 2 மணி நேரத்திற்கு பின் இளைஞர் ஒருவர் வழுக்குமரம் ஏறி பொன் முடி அவிழ்த்தது உற்சாகத்தை கிளப்பியது.

 

கிருஷ்ண ஜெயந்தியில் வழுக்குமர போட்டி

 

மதுரை அருகே திருப்பாலை கிராமத்தில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். பாரம்பரியமாக மூன்று நாட்கள் கொண்டாடப்படும் விழா இப்பகுதியில் பிரபலமானது. முதல் நாள் திருப்பாலை கிருஷ்ணன் கோயிலிருந்து ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சாமி,  கள்ளழகர் திருக்கோலத்தில்  கிராம சாவடிக்கு வந்து சேரும். இரண்டாவது நாள் சாமிக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் உரியடி திருவிழா நடைபெறும். நவநீதகிருஷ்ணன்  சாவடி மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் பூஜைகள்  நடைபெறும். பின்னர் வழுக்கு மர போட்டி நடைபெறும். இங்கு நடைபெறும் வழுக்கு மர போட்டி காண ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஒட்டுமொத்த கிராமமே திரண்டிருக்கும்.

 

2 மணி நேர போராட்டத்திற்கு பின் வெற்றி

 

இந்நிலையில் இந்தாண்டு வழுக்குமர போட்டி விறு விறுப்பாக நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போட்டி நடைபெற்றது. வழுக்கு மரத்தில் உச்சியில் உள்ள பொன்முடி எனும் பட்டுத் துண்டை அவிழ்க்க வேண்டும். அதில் 101 ரூபாய் காணிக்கை இருக்கும். பட்டுத்துண்டு கிராமத்தில் ஏலம் இடப்படும். இந்த துண்டு அதிக விலைக்கு ஏலம்போகும். அந்த துண்டை ஏலம் எடுப்பவர்களுக்கு, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு வழுக்கு மரத்தில் சிறப்பாக ஏறி தினேஷ்குமார் என்ற இளைஞர் தன் குழுவின் முயற்சியோடு பொன்முடி அவிழ்த்து வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த தேக்கு மரத்தில் வெந்தயம், கற்றாழை, விளக்கெண்ணை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டு வழுக்கு மரம் தயார் செய்யப்படுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். இந்த போட்டியில் பங்கேற்க 15 நாட்கள் விரதம் இருந்து வழுக்கு மரம் ஏறுவதாகவும் தெரிவித்தனர்.

 

5 ஆயிரத்திற்கு ஏலம் போன பொன்முடி

 

மேலும் கிராம இளைஞர் பாண்டி கூறுகையில்...,” எங்களுக்கு தீபாவளி, பொங்கலைவிட கிருஷ்ண ஜெயந்தி முக்கியமான பண்டிகை. எங்கள் கிராமத்தில் நடைபெறும் திருவிழாவை காண ஏராளமான இடங்களில் இருந்து வருகை தருவார்கள். மூன்று நாள் நடைபெறும் திருவிழாவில் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும். ஒட்டு மொத்த கிராமமும் போட்டியினை கண்டு ரசிப்பார்கள். சிறுவர்களும், இளைஞர்களும் மரத்தின் உச்சிக்கு ஏற முயற்சிப்போம். மரத்தில் தனி ஆளாக ஏறுவது மிகவும் கடினமான ஒன்று. அதனால் நண்பர்கள் கூட்டு முயற்சியோடு ஒரு நபர் மட்டும் மரத்தின் உச்சிக்கு சென்று பொன்முடியை அவிழ்த்து இறங்குவோம். இந்தாண்டு எனது நண்பர் தினேஷ் அவிழ்த்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவிழிக்கப்பட்ட பொன்முடி 5 ஆயிரத்தையொட்டி ஏலம் போனது” எனவும் தெரிவித்தார்.