மதுரையில் விசிக கொடிகம்பம் விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து வருவாய்த்துறை அதிகாரிகள் பணி விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் அரசு பணிகள் முடங்கின.
காவல்துறையினர் வாக்குவாதம்
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா பொறுப்பேற்றதில் இருந்து ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி ஆட்சியர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் நிலையில் மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்திரபட்டி வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 7ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 45 அடி கொடி மரம் நடப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி வருவாய் அலுவலர்கள் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளிச்சநத்தம் கிராமத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் விசிக கொடி மரத்தில் விசிக கொடி ஏற்ற வருவாய் அலுவலர்கள் அனுமதி வழங்கினர்.
ஆட்சியர் பரபரப்பு உத்தரவு
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 45 அடி கொடிமரம் நடுவதில் முறையாக பணியை மேற்கொள்ளாமல் கொடி மரம் நடுவதை தடுக்க தவறிய காரணத்திற்காக சத்திரபட்டி பிர்கா வருவாய் அலுவலர் அனிதா, காவனூர் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், காவனூர், வெளிச்சநத்தம் கிராம நிர்வாக உதவியாளர் பழனியாண்டி ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரையூர் மேலப்பட்டி, மதுரை புதூர், என விசிக கொடி கம்ப விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் கறார்காட்டிவந்த நிலையில் தற்போது வெளிச்சநத்தம் பகுதியிலும் விசிக கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் அனுமதி அளித்ததாக கூறி 3 அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிடை நீக்கம் செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முரண்பாடு இருந்து வருவதை வெளிப்படுத்துகிறது
ஏற்கனவே திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் விசிக திமுகவிடையே தற்போது கருத்துமோதல் ஏற்பட்டுவரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சரமாரியான குற்றச்சாட்டுகள் வைத்ததை தொடர்ந்து மீண்டும் மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கொடி நடப்பட்ட விவகாரத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மீதான நடவடிக்கை என்பது மதுரை மாவட்டத்தில் விசிக மற்றும் மாவட்ட ஆட்சியர் இடையே தொடரும் முரண்பாடு இருந்து வருவதை வெளிப்படுத்தியது.
போராட்டத்தால் முடக்கம்
இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் பணியிடை நீக்க நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுப்பு போராட்டம் காரணமாக அரசு பணிகள் முழுமையாக முடங்கி பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் மின் தடை? - முழு விவரம் இதோ
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Aadhav Arjuna: வளர்த்துவிட்ட திருமாவிற்கே சவால்? அறிவிப்பை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா - அடுத்து என்ன?