Aadhav Arjuna:  ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விசிகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துகளை பேசியதாக 6 மாத காலத்திற்கு அவரை கட்சியில் இருந்து நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள 4.38 நிமிடம் ஓடும் அந்த வீடியோ அண்மையில், விகடன் சார்பில் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பப்பட்டதாகும். அதில் ஆதவ் அர்ஜுனா கடந்து வந்த பாதை, அரசியல் பயணம், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற அமைப்பு உருவான விதம், திமுக உடனான பயணம், விசிகவில் இணைந்தது, அதில் ஆற்றிய அரசியல் பணிகள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.


தவெகவில் ஆதவ் அர்ஜுனா?


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் இணைந்து திமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாகவே, ஆதவ் அர்ஜுனை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து விசிக தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவே தன்னை விசிக கட்சியில் இருந்து விடுவித்துக் கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில் தான், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆதர் அர்ஜுனா விரைவில் தவெகவில் இணைவார் என கூறப்படுகிறது. தொடர்ந்து, தனது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற அமைப்பின் மூலம், தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் பணிகளை மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


அப்படி நடந்தால் அரசியலில் தனக்கு அங்கீகாரம் அளித்த திருமாவளவனுக்கு எதிராகவே, ஆதவ் அர்ஜுனா களமாடக் கூடும்.