மதுரையில் முக்கியமான பேருந்து நிலையங்களில் மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம், அண்ணா உள்ளிட்ட பேருந்துநிலையங்கள் முக்கியமானவை. இதில் பெரியார் பேருந்து நிலையத்தில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிகளவு பேருந்தில் பயணிப்பார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆசிரியரை மிரட்டுவது, மேசைகளை உடைப்பது, செல்போன்களைப் பயன்படுத்துவது, மாணவர்களை ராகிங் செய்து நடனம் ஆட வைப்பது, மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசுப் பள்ளி மாணவர்களின் காணொளிகள் தினந்தோறும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. காணொளிகளில் செங்கல்பட்டு, திண்டிவனம் வேப்பேரி, திருச்செங்கோடு, வேலூர் தொரப்பாடி, திருவண்ணாமலை எனப் பள்ளிகளின் பெயர் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது.
சென்னையில் கல்லூரி மாணவிகள் சாலையில் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதே போல் கோவையில் பள்ளி மாணவர்கள் சாலையில் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் மாணவிகள் தாக்கிக் கொள்ளும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இத்தகைய சம்பங்கள் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் இடையே வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.