மதுரையில் மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் உயிரிழந்த சூர்யாவின் பெற்றோர் பெயரைச் சொல்லி தன்னிடம் உள்ள சொத்துக்களை எழுதி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவரின் தாயார் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்

பள்ளி மாணவன் கடத்தல்


மதுரையில் கடந்த 11-ம் தேதி தனியார் பள்ளியில் படித்து வரும் பள்ளி மாணவன் ஆட்டோ ஓட்டுநருடன் கடத்தப்பட்ட வழக்கில் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முன்னாள் காவலர் செந்தில்குமார், திருநெல்வேலி மாவட்டம் ரகுமான் பேட்டை சேர்ந்த அப்துல் காதர், தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த வீரமணி காளிராஜ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 

 

இதில் தொடர்புடையதாக கூறப்படும் சூர்யா என்ற பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த தூத்துக்குடியை சேர்ந்த ஐகோர்ட் மகாராஜனை தனிப்படை காவல்துறையினர் வேறொரு வழக்கில் கைது செய்துள்ளனர். 

 

இந்நிலையில் மாணவனின் தாயார் ராஜலட்சுமி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆணையர் லோகநாதனை சந்தித்து தனக்கு கொலை மிரட்டல் வருவதால் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி புகார் மனு அளித்தார்

புகார் மனு 


கடந்த 29-ம் தேதியன்று இரவு தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த (உயிரிழந்த) சூர்யாவின் நண்பர் கிஷோர் மற்றும் அவரது நண்பரும் என்னிடம் சூர்யாவின் பெற்றோர் பேச வேண்டும் என தெரிவித்தனர், அப்போது எதற்கு என கிஷோரிடம் கேட்டபோது ”உயிரிழந்த சூர்யா உங்ககிட்ட கொடுத்த  சொத்துக்களை திருப்பி கொடுக்க வேண்டும் என (உயிரிழந்த) சூர்யாவின் பெற்றோர் கூறியதாக” கிஷோர் தெரிவித்தார். 

 

உயிரிழந்த சூர்யா என்னிடம் கடன் பெற்றதற்கான பணத்திற்கு மட்டும்தான் எனக்கு சொத்துக்களை கிரையம் செய்து கொடுத்துள்ளார் என கிஷோரிடம் கூறியதோடு தொந்தரவு அளித்தால் காவல்துறையில் புகார் அளிப்பேன் என சொன்னதற்கு, ”எங்கிட்ட சொல்வது போல சூர்யாவின் பெற்றோர் முன்னாடியெல்லாம் இப்படி பேசிட்டு இருக்காதீங்க எனவும்,  ஐகோர்ட் மகாராஜா ரிமாண்டு ஆகும் போது, அவருக்கும். உங்களுக்கும் தான் பழக்கம், நீங்க சொல்லி தான் குழந்தையை கடத்திட்டு, பழியை சூர்யா மேல தூக்கி போட்டீங்கன்னு வாக்குமூலம் கொடுக்க வச்சுருவாங்களாம் எனவும்,  சூர்யா எழுதிய மாதிரியே லெட்டர். டைரியெல்லாம் ரெடி பண்ணி வச்சுருக்காங்களாம். 

 

அதவச்சு தூத்துக்குடில புகார் கொடுத்து, அவுங்க மருமகன் கலெக்டராக இருக்கிறதுனால உங்களை அலைக்கழிப்பாங்களாம். மேலும் தூத்துக்குடி பக்கம் வரவச்சு ஐகோர்ட் மகாராஜாவை வச்சு உங்க மகனை கடத்துன மாதிரி உங்களையும் கடத்தி கொலை பண்ணிருவாங்க, யோசித்து நாளைக்கு நல்ல முடிவாக கூறுங்கள் என்று மிரட்டி விட்டு சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கும்  குடும்பத்தினர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு அந்த மனுவை வழங்கினார்.