கேரளம் வயநாடு பகுதியில் பெய்த கனமழையால், இன்று அதிகாலையில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவமானது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் மீட்பு பணி நீடித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
கேரளம் நிலச்சரிவு:
கனமழையுடன் கூடிய நிலச்சரிவால், முண்டக்கை மற்றும் சூரல்மலையை இணைக்கும் பாலமானது அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கடைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் சேறும் சகதியுமாக அப்பகுதி இருக்கிறது. அப்பகுதிகளில்,பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
முதல்வர் பினராயி விஜயன்
இந்நிலையில், கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, இதுவரை இல்லாத வகையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவானது, இதயத்தை உலுக்கும் பேரழிவாகும். இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம், ஆனால் எண்ணிக்கை மாறலாம். 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். பலர் இடிபாடுகளுக்குள் இன்னும் சிக்கியுள்ளனர். நாங்கள் வயநாட்டில் 45 நிவாரண முகாம்களையும், மாநிலம் முழுவதும் மொத்தம் 118 முகாம்களில் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படை, என்.டி.ஆர்.எஃப். ராணுவம் மற்றும் கடற்படையின் பல்வேறு பிரிவுகள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
- வயநாட்டில் 321 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன. 60 பேர் கொண்ட NDRF குழு வயநாடு சென்றடைந்தது, பெங்களூரில் இருந்து 89 பேர் கொண்ட குழு சென்று கொண்டிருக்கிறது. பேரிடர் குறித்து அறிந்ததும், பிரதமர் மற்றும் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களின் உதவியை வழங்க முன்வந்துள்ளனர். இந்த நெருக்கடியை சமாளிக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்துள்ளனர்.