மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் எதிரே உள்ள தனியார் விடுதியில் உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரையின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமானது மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல் மற்றும் அனைத்து வகை உணவகங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக பல்வேறு ஆலோசனைகள் உணவக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது," தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் சார்பில் ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. உணவகங்களை எப்படி சுத்தமாக சுகாதாரமாக வைத்திருப்பது என்பதும் மதிப்பெண்கள் அடிப்படையில் உணவகங்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் உணவகங்களில் உணவு தயாரிக்கும் போது கலர் வகை பொடிகளை சேர்க்கக்கூடாது. சமைத்த உணவுகளை குளிர்சாதன பெட்டிகளில் வைக்க கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 1035 உணவு கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் 84 கடைகளில் 246 கிலோ காலாவதியான கோழிக்கறி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை கடைபிடிக்காத 60 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 520 பெட்டி கடைகளில் ஆய்வு நடத்தி குட்கா, பான் மசாலா 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ஒன்பது கடைகளுக்கு 5000 வீதம் 45000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் வைத்திருந்த 58 கடைகளுக்கு 1,16000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். உணவுப் பொருள்களில் ரசாயன கலர் போன்ற பொடிகள் கலக்கக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் டைபாய்டு காய்ச்சல் இல்லை என்ற பிட்னஸ் சர்டிபிகேட் வாங்கி இருக்க வேண்டும். மதுரையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்களில் இறைச்சிகளை பராமரிக்க ப்ரீசர் வைத்துள்ளார்கள். சிறிய உணவகங்களில் பிரீசர் இல்லை அதனால் விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம். மதுரையில் மீன் மற்றும் கோழி கடைகள் இறைச்சிக் கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். சாலையோர உணவகங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். சாலையோர கடைகளுக்கு உடனடியாக அபராதம் அபராதம் விதிக்க வேண்டாம் என்று பார்க்கிறோம். மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் புகார் எண் 9444042322 இந்த புகார் எங்களுக்கு 50 லிருந்து 60 புகார்கள் வருகிறது. 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். புகார் அளிப்பவர்களின் பெயர் வெளியிட மாட்டோம்.
புகார் அளித்தவர் யார் என்றே தெரியாது. புகார்தாரரின் விவரத்தை மறைத்து வருகிறோம். மதுரையில் 32,000 கடைகளுக்கு லைசன்ஸ் கொடுத்துள்ளோம். அன்றாடம் தினசரி 10 கடைகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ந்து நோட்டிஸ் உணவ உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற முறையில் உள்ள கடைகளுக்கு உடனடியாக சீல் வைத்து வருகிறோம். ஹோட்டல்களில் உள்கட்டமைப்பு எப்படி வைத்திருக்க வேண்டும்? கலர் பயன்படுத்தக்கூடாது பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. ப்ரீசர் வைத்திருக்க வேண்டும் மைனஸ் 18 டிகிரியில் உணவை பதப்படுத்த வேண்டும். தொடர்ந்து விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம். இதை எல்லாம் கேட்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.