பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியவர்களின் லைசென்ஸை ரத்து செய்தவதற்கு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை போலீஸ் எஸ்.பி பேட்டியளித்துள்ளார்.

 

மருதுபாண்டியர்கள் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் மரியாதை செலுத்துவதற்கு அனுமதிபெற்ற வாகனங்கள் விழா நடைபெறும் பகுதிக்கு செல்லும் வழியில் வாகனங்கள் மீது அமர்ந்து செல்வது, விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக செல்வது, மதுபோதையில் செல்வது போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதாக அதிவேகமாக இயக்குதல், பொதுமக்கள் அச்சுறுத்தல் செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் மதுரை மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

 





 

இதனையடுத்து போக்குவரத்து விதி்களை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்ய 6 தனிப்படைகள் அமைத்து அவர்கள் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன்படி இருவேறு விழாக்களின் போது விதிமுறைகளை மீறி இயக்கியதாக 70 கார்கள் மற்றும் 7 பைக்குகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் இன்றுவரை 7 பைக்குகள் மற்றும் 63 கார்கள் என 70 வாகனங்களை பறிமுதல் செய்து ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.



 

இதுகுறித்து மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக 70 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 70 நான்கு சக்கர வாகனங்களில் 7 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், பொதுமக்கள் அச்சுறுத்தல் செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, 6 தனிப்படைகள் அமைத்து தமிழகம் முழுதும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன, 63 வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ்சை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி எடுத்து கொள்ள வேண்டும்" என கூறினார்.



 

இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மூலமாகவே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  "FOLLOW TRAFFIC RULES" என்ற வாசக வடிவில் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை நிறுத்திவைத்து அதனை ஹெலிகேம் மூலமாக வீடியோவாக பதிவுசெய்து வெளியிட்டு நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.