தென்மாவட்டங்களில் கனமழை

 

வடகிழக்கு பருவமழையை ஒட்டி உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட நான்கு வடமாவட்டங்களில் கடந்த நான்காம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தற்போது தான் மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். இந்நிலையில், தென்மாவட்டங்களில் கனமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. அந்த வகையில், தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தேனி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று காலை 7 மணி வரை, கனமுதல் மிக கனமழை பெய்யும் என பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





 விடுமுறை


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கும் தென்மாவட்டங்களில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.





மழை பொழிந்தும் மதுரைக்கு விடுமுறை இல்லை

 

மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மிதமான தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படாத சூழலில் பள்ளி செல்லக்கூடிய மாணவ மாணவிகள் மழையில் நனைந்த வண்ணம் பள்ளிகளுக்கு சென்றனர். பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் இந்த தொடர் மழையால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்துடன் சென்று வருகின்றனர்.



 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்


 

அதிகனமழை பாதிப்பை எதிர்கொள்ள தென்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், மீட்பு பணிகளைத் உடனடியாக துரிதப்படுத்தவும், மழைநீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்து துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.