மதுரை மல்லிப்பூவின் விலை இன்று (01.02.2025) நிலவரப்படி கிலோ 5 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட் நிலவரம்
மீனாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக மதுரை என்றதும் நினைவிற்கு வருவது மல்லிகைப் பூ தான். தனித்துவமான நிறம், வாசனை, பூவின் கெட்டித் தன்மை என்று மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் விளையக்கூடிய பூக்களுக்கு தனி மவுசு உள்ளது. இதனால் மதுரை மல்லிகைப் பூக்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடு என நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆன்மீகநகரமாக கருதப்படும் மதுரையிலிருந்து பூக்களை வாங்க வியாபாரிகள் பெரிதும் விரும்புகின்றனர். மதுரையில் கிடைக்கும் பூக்கள் தான் வாசனை திரவியங்களுக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரை மல்லிப்பூவின் விலை இன்று (01.02.2025) நிலவரப்படி கிலோ 5 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Devon Conway : காயமடைந்த கான்வே! ஐபிஎல் 2025-ல் விலகல்? சென்னை அணி ரேடாரில் இருக்கும் 5 வீரர்கள் இவர்கள் தான்!
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: (01.02.2025)
மதுரை மல்லி கிலோ ரூ.5000, மெட்ராஸ் மல்லி ரூ.2000, பிச்சி ரூ.2500, முல்லை ரூ.2500, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.270, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.2,000, ரோஸ் ரூ.280, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.320, கோழிக் கொண்டை பூ ரூ.80, அரளி ரூ.230, தாமரை (ஒன்றுக்கு) ரூ.50 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த நாட்கள் முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலையில் கணிசமான விலையற்றம் உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப்பூ உள்ளிட்ட சில பூக்களின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது, என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்தார்.
எகிறிய மல்லிப்பூ விலை
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு பனிப் பொழிவு இருந்ததால் பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதனால் மல்லிப்பூவின் விலை 2ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனையானது. இந்த சூழலில் தற்போது தொடர் முகூர்த்தம் காரணமாக விலை எகிறியுள்ளது. கடந்த 30-ம் தேதி மல்லிகைப் பூ கிலோ, 4200ரூபாய் இருந்தது. அதே போல் நேற்றைய நிலவரப்படி 3500 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி கிலோ 5ஆயிரம் ரூபாயாக மாறியுள்ளது. இது தினசரி வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.