மதுரையில் போராட்டம்


மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, அ. வல்லாளபட்டி உள்ளடக்கிய ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு, மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் மறு ஆய்வு செய்ய மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு செய்தது. முழுமையாக மேலூர் பகுதியில் ரத்து செய்யக்கோரி, மேலூர் அருகே நரசிங்கப்பட்டியில் இருந்து மதுரை தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக சென்று அங்கு தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் அரிட்டாபட்டி, வல்லாளபட்டி பகுதிக்கு சென்ற பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. நிம்மதியாக பொங்கல் கொண்டாடுங்கள் என பொதுமக்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். அதே போல் அப்பகுதி விவசாயிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக நம்பிக்கையும் தெரிவித்தார். இந்நிலையில் விவசாயிகள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டநிலையில், அமைச்சரை சந்திக்க வைத்து அப்டேட் கொடுத்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் அது குறித்து அவர் குறிப்பிடுகையில்..


 






 


அண்ணாமலையின் பதிவு


”இன்றைய தினம், புதுடெல்லியில், மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷான் ரெட்டி அவர்களை, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் மற்றும் பி.ஜே.பி., மூத்த தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசினோம். மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை, நமது மாண்புமிகு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் அவர்கள் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எப்போதும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் நலனுக்காகத் துணை நிற்பார் என்று நமது விவசாயிகளுக்கு உறுதியளித்தார். மேலும், மேலூர் தொகுதி விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளுக்கேற்ப, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்” எனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.