நாட்டரசன் கோட்டையில் 200 ஆண்டுகளாக நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் தை மாதம் முதல் செவ்வாய் அன்று கொண்டாடப்பட்டது. 900 க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
செவ்வாய் பொங்கல் 2025
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் புகழ்பெற்ற செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சி நேற்று மாலை துவங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் அன்று செவ்வாய் பொங்கல் நடைபெறும். நாட்டரசன் கோட்டையை பூர்வீகமாக கொண்ட நகரத்தார்கள் தங்கள் பணி நிமித்தம் காரணமாக வெளியூர்களிலும், வெளி நாடுகளில் இருந்தாலும் செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு குடும்பத்தை ஒரு புள்ளி என்று கணக்கில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புள்ளிகளின் பெயரை சீட்டாக வெள்ளி பானையில் போட்டு ஒரு சீட்டை மட்டும் தேர்வு செய்து சிறப்பு பொங்கல் வைக்க அனுமதிப்பார்கள். அவர்கள் மட்டும் மண்பானையில் பொங்கலிட்டு கிடாய் வெட்டுவார்கள். மற்ற நபர்கள் வெள்ளி அல்லது வெங்கல பானையில் பொங்கல் வைத்து விரும்பினால் கிடாய் வெட்டுவார்கள். இந்நிலையில் இந்தாண்டு 900க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
புதிய உறவுகள் மலரும் செவ்வாய் பொங்கல்
நம் முன்னோர்கள் பண்டிகைகள், கொண்டாட்டங்களை காரணமில்லாமல் வைத்ததில்லை. உறவுகள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை நாட்களில் புதிய உறவுகள் மலரும். இருமனங்கள் இணையும் திருமணங்கள் நிகழ்ந்தேறும் என்று நினைத்து இதுபோன்ற பொங்கல் பண்டிகைகளை தலைமுறைகள் தாண்டி கொண்டாடி வருகின்றனர். நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை நகரத்தார் சமுதாய மக்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம்.
நகரத்தார் சார்பில் 916 பேர் பொங்கல்
வழக்கம் போல நிகழாண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை நேற்று மாலை தொடங்கியது. முதல் பொங்கல் பானை வைக்க தேர்வு செய்யப்பட்ட மு.பழ.அ.கண.அ.ராமசாமி செட்டியார் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 5 மணிக்கு பொங்கல் வைக்க தொடங்கியவுடன் தொடர்ந்து மற்றவர்களும் பொங்கலிட தொடங்கினர். முதல் பொங்கல் பானை மட்டும் மண் பானையிலும் மற்றவர்கள் வெண்கல, சில்வர் பானைகளிலும் பொங்கல் வைத்தனர். நகரத்தார் சார்பில் 916 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர மற்ற சமூகத்தினர், நேர்த்திக்கடன் வைத்துள்ள நூற்றுக்கணக்கானவர்களும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். அனைவரும் வெண் பொங்கல் மட்டுமே வைத்தனர். இவ்வாறு கோயில் முன் அமைந்துள்ள இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பெண்கள் வரிசையாக பொங்கலிடும் நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - என் பெயரை பயன்படுத்த வேண்டாம்.. முன்னாள் அமைச்சர் மனுவின்படி நீதிமன்றம் ரத்து செய்தது
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...