மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல்  (நுகர்பொருள்) அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள  ரேசன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ள 50 ஆயிரம் இலவச வேட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. 






இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு வேஷ்டி -சேலை வழங்குவதற்காக பண்டல்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் நள்ளிரவில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் அலுவலக காவலாளி உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.



 

விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் 4 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் அருகிலேயே கருவூலமும் இருந்த நிலையில் தீயை பராவமல் கட்டுப்படுத்தினர் தொடர்ந்து வேட்டி சேலைகளில் தீப்பரவியதால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இன்று முதல் ரேசன் கடைகளில் வழங்கப்பட  இருந்த   வேட்டி சேலை அனைத்தும் தீயில் கருகி சாம்பலானது. மேலும் அலுவலகத்தில் உள்ள கோப்புகள், கணிணிகள் போன்றவையும் தீயில் கருகியது. இந்த தீ விபத்து சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்து குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நூற்றாண்டு கடந்த கல் கட்டித்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருப்பதால் அனைத்து தீயணைப்பு அதிகாரிகளும் விரைந்து வந்து தீயை  அணைக்கும் பணியை முடுக்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தீ விபத்து நடந்த இடததை பார்வையிட்டார்.