மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை  குறைக்கும் விதமாக  மாநகர காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கை , குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை கைது செய்வது அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றது.






குற்ற செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலானோர் அவர்கள் பயணிக்க கூடிய நான்கு சக்கர வாகனங்களில் தங்கள்  யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத வகையில் கருப்பு நிற கூலிங் ஸ்டிக்கர்களை கண்ணாடியில் ஒட்டிச் செல்வதும், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்துவதற்கும், ஆட்களை கடத்துவதற்கும் இந்த கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய கார்கள் பயன்படுத்துவது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது . மேலும்  கார்களின் பயணிப்பவர்கள் முகம் தெளிவாக தெரிவதை உறுதி செய்ய சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளது.


 

இந்த நிலையில் மதுரை மாநகர காவல் துறையினர் போக்குவரத்து விதிகளை  மீறும் வகையில் கார் உள்ளிட்ட வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டி செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி கார்களில் இருந்து கருப்பு நிற ஸ்டிக்கர்களை கிழித்து அகற்றுவதுடன் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். இதுபோல் கார் கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



 

மதுரை மாநகர  காவல்துறையினர் மாநகர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கார்களில் இருந்த கருப்பு நிற ஸ்டிக்கர்களை அகற்றி  50 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.  மேலும் காவல்துறை தலைவரின் உத்தரவுப்படி  காவல்துறையினர் தங்களது சொந்த வாகனங்களில் காவல் (police) என எழுதி இருந்தாலும் அதனையும் காவல்துறையினர் அகற்றினர்.