கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேவுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி, தான் படித்து வந்த பள்ளியின் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால் இது வன்முறையில் முடிய பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி போராட்டத்திற்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்தவர்களை குறிவைத்து கைது நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சக்தி கல்வி குழுமத்தின் ஸ்ரீமதி மாணவி இறந்தது தொடர்பாக பழனியைச் சேர்ந்த கோகுல் (22)த.பெ. சபரிகிரி என்பவர் தனது செல்போனில் ஸ்ரீமதி என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்து அதில் உள்ள லிங்க் மூலம் ஒவ்வொருவரும் தாமாகவே குரூப்பில் இணைந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் லிங்க் உருவாக்கி,
அதன் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஸ்ரீமதி மற்றும் ஏழு பெண்களுக்கான நீதி மற்றும் சக்தி கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டி போராட்டம் எனவும் விருப்பம் உள்ளவர்கள் தங்களது மதிக்கத்தக்க ஆதரவைத் தர வேண்டும் எனவும், நாளை பழனி இளைஞர்களால் நடக்கக்கூடிய கண்டன போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நண்பர்கள் இந்த குழுவில் இணைந்து தங்களது முதன்மை ஆதரவை தர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, அமைதியான சூழலில் இருக்கக்கூடிய பழனி நகரத்தை கள்ளக்குறிச்சியில் நடந்தது போன்ற வன்முறையை தூண்டும் விதமாக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக, அசாதாரண சூழ்நிலை ஏற்படும் செயலில் ஈடுபட்டதாலும்,
அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்பதாலும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் இதுபோன்ற சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டாலோ பதிவிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ அந்த குரூப்பினுடைய அட்மின் மற்றும் அதை பரப்பியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்