மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுமார் 920 கோடி செலவில் பெரியார் பேருந்து நிலையம் மேம்பாடு, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் சீரமைப்பு , வணிகவளாகம், வைகை ஆற்றங்கரையில் பூங்கா, அடுக்குமாடி வாகன காப்பகம் உள்பட 13 பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பணிகள் தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் ’பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்பு கோபுர வடிவில் அமைய உள்ளது, பேருந்து நிலையத்தின் பெயரும் மாற்றப்பட உள்ளது’ என்ற சர்ச்சை எழுந்தது.



இந்நிலையில் ஸ்மார் சிட்டி பணிகள் முடிந்து வரும் வேலையில் புதிய பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்பில் பெரியாரின் பெயர் பலகை மின் ஒளியில் மிண்ணுவது பலரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மதுரை மக்களிம் மனதில் அதிகமாக பெரியார் பெயரை உச்சரிக்க பெரியார் பேருந்து நிலையமும் ஒரு காரணம். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இப்பேருந்து நிலையத்தைக் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு மதுரையின் ஓர் அடையாளமாகத் திகழும் இப்பேருந்து நிலையம் ஸ்மார் சிட்டி பணிக்காக மூடப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. தற்போது இந்த பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.



இந்த பேருந்து நிலையம் ஆரம்ப காலகட்டதில்  மதுரை இரயில் நிலையத்துக்கு அருகில் சிறிய அளவில் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆரம்ப காலத்தில் தனியார் பேருந்துகளே தமிழ்நாட்டில் அதிகமாக பயணித்ததால் பேருந்து நிலையங்கள் கட்டுமானத்தில் அரசு அதிகம் ஆர்வம் காட்டவில்லை. 1971-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான் தனியாரிடமிருந்து  போக்குவரத்து, அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதற்குப்பின் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் பேருந்து நிலையங்கள் சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டன.



 

அந்த வகையில் மதுரை மாநகராட்சியாக மாறிய 1971-ம் ஆண்டில் மதுரை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அன்று முதல் பெரியார் மதுரையின் ஓர் அடையாளமானார். இந்நிலையில் இது பிடிக்காத சில அமைப்புகள் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்ச்சைகளை கிளப்பினர். ஆனால் அதிகாரிகள் இதனை முற்றிலுமாக மறுத்து பெரியாரின் பெயரில் தான் தொடர்ந்து  பேருந்து நிலையம் இயங்கும் என முற்றுப் புள்ளி வைத்தனர். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டியின் கீழ் பேருந்து நிலைய பணிகள் முடிந்து வரும் நிலையில், பெரியார் பெயர் பலகை மின் ஒளியில் மிண்ணுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.