தமிழ்நாடு முழுவதும் இன்று 40,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. தற்போது வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் இன்று படைபெற்று வரும் "மெகா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தங்களது குடும்பத்தினருடன் சென்று தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். 






ஆவின்பால் பாக்கெட்டில் தடுப்பூசி பரப்புரை   


மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 1,500 இடங்களில் 18 வயது நிரம்பிய அனைத்து நபர்களுக்கும் இலவச தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெறும், மாபெரும் தடுப்பூசி முகாம் குறித்த தகவல்கள்  மக்களிடையே சென்றடையும் நோக்கில் ஆவின்பால் பாக்கெட்டில் தடுப்பூசி முகாம் குறித்த பிரச்சார வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.   


 


மதுரை மாநகரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில்  இன்று கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று ஆவின் பால்பாக்கெட்டில் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக, மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை இல்லாத நிலையை ஏற்படுத்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது 






இதற்கிடையே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும். இனிவரும் காலங்களில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.