வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கொரோனா பொம்மையை யாக குண்டத்தில் பொசுக்கி மதுரையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அசாதாரண சூழலில் இத்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்படியான சூழலில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். நோய் தடுப்பு பணி, ஆய்வுப் பணி, நோய் கட்டுப்பாட்டு பணி என பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்துவரும் நிலையில் மதுரையில் கொரோனா கட்டுப்பாட்டிற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.
மதுரை மாசி வீதிகளில் ஒன்றான தெற்குமாசி பகுதியில் உள்ள ஸ்ரீ திரெளபதியம்மன் கோயிலில் கொரானா வைரஸ் அழியவும், உலக மக்கள் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியாக, நன்மையோடு வாழ வேண்டி கோயில் பூசாரிகள், சிறப்பு யாகம் செய்தி வழிபாடு நடத்தினர். தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டு ஹோம குண்டத்தில் வேத மந்திரங்கள் சொல்லி அக்னி வளர்க்கப்பட்டது. வளர்க்கப்பட்ட அக்னியில் கொரானா வைரஸ் போன்ற உருவ பொம்மை ஒன்றை உருவாக்கி அதனை ஹோம குண்டத்தில் போட்டு அர்ச்சகர்கள் யாகம் வளர்த்தனர். தொடர்ந்து திரெளபதியம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். இந்த யாக பூஜையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த யாக பூஜையில் ஐந்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீக பணியில் ஈடுபடும் உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து பேசியபோது, " கொரோனாவை ஒழிக்க முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். ஒரு பக்கம் தடுப்பூசி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவகிறது. இவ்வாறான சூழலில் மன தைரியம் மற்றும் பாசிட்டிவ் வைப்பிரேஷன் ஏற்பட வேண்டுதல்களும் அவசியம்தான். ஆனால் கூட்டமாக குவிந்தோ நோய் தொற்றும் பரவும் வகையிலோ எந்த செயலும் செய்துவிடக்கூடாது" என்று தெரிவித்தார்.