செம்மொழியான தமிழ் மொழி என்று உலக அரங்கில் தமிழுக்கென தனி பெருமை உண்டு . தமிழுக்கென பல்வேறு வரலாறுகள் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது. செம்மொழியான தமிழ்மொழி என்று மொழிகளில் சிறந்த மொழியாக தமிழுக்கென ஒரு தனித்துவம் உண்டு. மொழிகளில் மூத்த மொழியாகவும் தமிழ் மொழி திகழ்கிறது.
இதனை அவ்வப்போது உறுதிப்படுத்தும் விதமாக மதுரை ,தேனி , திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மூத்தகுடி மக்கள் பயன்படுத்திய பண்டைய கால மக்களின் வாழ்வாதாரங்களை எடுத்துக்காட்டும் விதமாக கல்வெட்டுகள், பொருட்கள தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது நடுகல். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காணப்படும் பாறை ஓவியங்கள் ,கல்வெட்டுகள் படைப்புச் சிற்பங்கள் என தொல்லியல் அடையாளங்களை பறைசாற்றுவதாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாக ஆய்வாளர்கள் பார்ப்பது நடுகற்கள்.
ஆண்டிபட்டியில் உள்ள புள்ளி மான்கோம்பை எனும் சிற்றூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவின. குறிப்பாக சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி எனும் பிராகிருத மொழி கலப்பின்றி எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களின் ஆதி வடிவமான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று நடுகற்களில் இருந்தன. தமிழ் மொழிக்கு எத்தனையோ பழமையான இலக்கியச் சான்றுகள் இருந்தாலும் அதனுடைய பழமையான எழுத்து வடிவங்கள் கிடைக்காமல் இருந்தன. அதனை பூர்த்தி செய்ய உதவியது 2006-இல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கிடைக்கப்பெற்ற புள்ளிமான் கோம்பை கல்வெட்டுகள். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்த நடுகற்களின் தொன்மையை வைத்துதான் உலக அரங்கில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். மூன்று அடி உயரமும் ஒன்று முதல் ஒன்றரை அடி அகலமும் உள்ள இந்த நடுகற்கள், சங்க காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளில் மேல் செய்யப்படும் ஈமச் சின்னங்களின் ஒரு பகுதியாகும்.
கி-மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகற்கள் தான் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்கற்களிலேயே மிகவும் பழமையானது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் மிக பழமையானதாக அசோகரின் பிராமி கல்வெட்டு கருதப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு முன்பே தமிழர்கள் மொழியறிவு, எழுத்தறிவு பெற்றவர்கள் கல்வெட்டுகளில் எழுத்துகுறிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பதை புலிமான்கோம்பை கல்வெட்டுகள் நிரூபித்துள்ளது.
மேலும் படிக்க : 40 சதவிகிதம் அதிகரித்த குழந்தைத் திருமணங்கள் - தமிழ்நாட்டில் அதிர்ச்சி!
சங்ககால இலக்கியங்கள் குறிப்பிடும் குறிப்பாக தொல்காப்பியம் குறிப்பிடும் ”ஆகோள்” அதாவது ஆநிரை கவர்தல் அல்லது கால்நடைகளைக் கவர்ந்து செல்லுதல் பற்றிக் கூறும் முதல் நடுகல் இதுவே ஆகும் தமிழ் சமுதாயம் அக்காலத்தில் எழுத்தறிவு பெற்றிருந்த சமுதாயமாக இருந்தது என்பதற்கும் பிராகிருதம் போன்ற வடமொழி கலப்பின்றி தமிழ் சொற்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர் என்பதற்கும் புள்ளிமான் கோம்பையில் கிடைத்த இந்த நடுகற்களை சான்றாக இருக்கிறது என்று தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் தெரிவிக்கின்றது