தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது,இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பாக பல்வேறு விதமாக கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றை செய்யுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா நடிகர்களையும் அரசு பயன்படுத்தி வருகிறது.
அரசின் விழிப்புணர்வு விஷயங்களில் எப்போதும் தவறாமல் பங்கேற்பது கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா. தங்களது மலர்கள் மூலம் ஏதேனும் வடிவங்களை உருவாக்கி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு யாரும் வருவதில்லை. சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வருடா வருடம் நடக்கும் மலர் கன்காட்சி நடக்கவில்லை. இந்த ஆண்டு நடக்கும் என எண்ணியிருந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்ததால் கடும் ஊரடங்கு அமலானது. மேலும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் சுற்றுலா தடை செய்யப்பட்டது. ஆனால் கோடை காலத்தில்தான் பிரையண்ட் பூங்காவில் ஏராளமான வண்ண வண்ண பூக்கள் பூத்து குலுங்கி வரும்
இந்நிலையில் தற்போதும் பூங்கா முழுக்க ஏராளமாக பூக்கள் பூத்துக்குலுங்கியுள்ளன. கண்காட்சி நடக்கவில்லை என்றாலும் கூட கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரையண்ட் பூங்கா நிர்வாகம் கொய்மலர்கள், ஆஸ்ட்ரோ மேரியா, கோரியாப்சிஸ், ஹைட்ரேஞ்சியா, அகபந்தஸ் உள்ளிட்ட 10,000க்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதாலும், முகக்கவசம் அணிவதாலும் கொரோனா வைரஸ்கள் உடைந்து சிதறி அழியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக மலர் அலங்காரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன, இந்த மலர் அலங்காரம் சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு 2 நாட்களில் உருவாக்கப்ட்டுள்ளது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது, இந்த மலர் அலங்காரத்தை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லாமால் பிரையண்ட் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. வீட்டில் இருப்போம், கொரோனாவை எதிர்த்து போராடுவோம்.
கொரோனா தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொடைக்கானலில் அழகிய மலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு ரசிக்கும் படியாகவும் அதே நேரத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என ஏற்பட்டாளர்கள் நம்புகின்றனர். அதுமட்டுமின்றி, கொடைக்கானல் வரமுடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த புகைப்படங்கள் கண்களுக்கு காட்சியாகவும், கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.