முட்டை உடைந்தால் என்ன செய்ய முடியும் அதுபோல்தான் தீபாவளி அன்று பட்டாசால் காயமடைந்த குழந்தைகளின் கண் பாதிப்படைந்துள்ளது என அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி கிம் பேட்டியளித்தார்.

 

 முதன்மை மருத்துவ அதிகாரி கிம் பேட்டி

 

மதுரையில் தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட கண் காயங்களால் 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டு பார்வை பறிபோனது  என அரவிந்த் கண் மருத்துவமனை தகவல் தெரிவித்திருந்தது. நாடு முழுவதிலும் கடந்த 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கொண்டாடினர். பட்டாசுகள் வெடிக்கும்போது ஏற்பட்ட  காயங்கள் காரணமாக மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தீபாவளி அன்று வெடி வெடிக்கும் போது மதுரையில் நான்கு குழந்தைகளுக்கு கண் முற்றிலுமாக பறிபோன  சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சம்பவம் குறித்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி கிம் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறும்போது, “தீபாவளி அன்று வெடி வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டு கண்கள் பாதிக்கப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 104 நபர்கள் வந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் 264 க்கும் அதிகமான நபர்கள் சிகிச்சைக்காக வந்தனர்.

 

பெற்றோர்கள் தான் மிகவும் கவனமாக குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்


மதுரையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு கருவிழியின் பாதிப்பு (corneal tear ) ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மிகவும் வருத்தத்தக்க செய்தி என்னவென்றால் நான்கு குழந்தைகளுக்கு முற்றிலுமாக கண் பார்வை பாதிக்கப்பட்டு கண்கள் எடுக்கப்பட்டுள்ளது. நான்கு பேரும் குழந்தைகள் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மீண்டும் அவர்களுக்கு கண் பார்வை கிடைக்குமா என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது.  வருங்காலத்தில் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் கவனமாக இருப்பதைவிட அவர்கள் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பார்வை என்பது வாழ்வின் மிக முக்கிய அங்கமான ஒன்று. இப்போது அந்த நான்கு குழந்தைகளும் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது வேதனையாக உள்ளது. கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் சரி செய்து விடலாம். முட்டை உடைந்தால் என்ன ஆகும் அதுபோல்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பத்திற்கும் மேற்பட்டோருக்கு வெவ்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். பெற்றோர்கள் தான் மிகவும் கவனமாக குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

 

உங்கள் குழந்தையை நீங்கள்தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்


 

மேலும், ”குழந்தையை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் உங்கள் குழந்தையை நீங்கள்தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என தீபாவளி அன்று வெடி வெடிக்கும் போது காயம் ஏற்பட்டு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ள குழந்தையின் தாய் பேட்டியளித்தார்.